பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


கோடுகளும் கோலங்களும்

1

புதன் கிழமை. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காதாம். செவந்தி படுக்கையில் உட்கார்ந்தவண்ணம் உள்ளங்கைகளை ஒட்டிக் கண்களில் வைத்துக் கொண்டு எழுந்திருக்கிறாள். சாதாரணமாகவே காலையில் ஐந்து மணிக்கு அவள் விழித்து எழுந்து விடுவாள். இன்று இன்னமும் ஐந்தாயிருக்காது என்று தோன்றியது.

அவள் படுத்திருந்த உள்வாயில் நடையில் ஒரு குட்டித் திண்ணை இருக்கிறது. வாசலில் ஒரு பக்கம் நீண்டும், ஒரு பக்கம் ஒருவர் மட்டுமே உட்காரும் அகலத்திலும் திண்ணைகள் இருக்கின்றன. நீண்ட திண்ணை உள்ள பக்கத்துக் கோடியில் ஒரு அறையும் உண்டு. அதில் அநேகமாக, நெல் மூட்டைகள் இருக்கும். மழைக்குப் பாதுகாக்க வேண்டிய கட்டாயமாக விறகு எரிமுட்டை கூடச் சேர்ந்திருக்கும்! வைக்கோல் தூசு எப்போதும் உண்டு.

நடை கடந்தால் முற்றம், சார்புக் கூடம் தவிர இரு புறங்களிலும் தாழ்வரை. ஒரு பக்கத்தில் அம்மி கல்லுரல் சாமான்கள். பின்பக்க நடையை ஒட்டிப் பெரிய சார்புத் தாழ்வரை. அதில் குந்தாணி, உலக்கை, ஏர், உழவு சாதனங்கள் இட்ம் பெற்றிருக்கின்றன. கிணறு, துவைக்கல், மாட்டுக் கொட்டில்... உழவு மாடுகள்... ஒரு சின்னப் பசு, அதன் முதற் கன்று...

மாட்டுக் கொட்டில் மண் சுவரும் கூரையும் புதுப்பிக்க வேண்டும் என்று சொல்லுகின்றன. வீட்டுக் கூடம் முன்புறம் எல்லாம் நாட்டு ஓடு வேய்ந்த கட்டிடங்கள். சமையலறை, பின் நடைச் சார்பு தென்னங் கீற்றுக் கூரை.