பக்கம்:உத்தரகாண்டம்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    313

வாளத்துல நின்னு மறிக்கிறாங்கன்னாங்க. இப்ப பஸ்ஸு ரோட்டோட போவுது. சனங்கள ஏம்பா இத்தினி கஷ்டப்படுத்தணும்?”

“இதெல்லாம், இன்ஸ்பெக்டர்ட்ட வந்து சொல்லு...”

சரி, வெவரம் இல்லாத ஆளாக இருக்கிறான். என்ன கலவரம் நடந்து இவ்வளவுக்கு ஆயிருக்கும்? பட்டணத்தில் தான் துப்பாக்கி, கொள்ளை வண்டி மோதிச் சாவு அன்றாடம் அரங்கேறுது. கிராமத்தில வந்து, தங்கி எதானும் நல்லது செய்யலாம் என்று பசுங்கனவுகளில் மிதந்தாளே?

வாய்க்கால் கரை ஓரத்தில், ஊத்தங்கரை எல்லையில் புதிய போலீசுச்சாவடி இருக்கிறது. கூரைதான். தீயணைப்பு வாளி. சைகிள். எங்கிருந்தோ முளைத்தாற் போல் ஓர் அழுக்குக் கவுனுடன் ஒரு பெண் குழந்தை அவர்களைப் பார்க்கிறது. போலீசுப் பயம் இல்லையோ?

அந்தக் காவலன், மேசையடியில் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் அதிகாரியின் முன் விறைப்பாக வணக்கம் தெரிவிக்கிறான்.

அந்த அதிகாரி இளம் பிள்ளையாக இருக்கிறான்.

“ஸார், இவங்க அழகாபுரிப் பக்கம் வராங்க..”

அவன் அவர்கள் இருவரையும் ஏற இறங்கப் பார்க்கிறான். பிறகு மரியாதையாக, “என்னம்மா? யாரு நீங்க? எங்கிருந்து வந்திருக்கிறீங்க!” இவளுடைய வயதுக்கும், நலிவுக்கும் மதிப்புக் கொடுக்கிறான். அங்கே ஒரு பெஞ்சு இருக்கிறது. “உக்காந்து பேசுங்கம்மா, யாரு நீங்க?”

“தியாகி குடும்பம் அய்யா. காந்தி, நேரு எல்லாம் வந்திருக்காங்க. சரோ அம்மா, காந்தி கிட்ட பேசிருக்காங்க. கலியாணம் பண்ணி, புருசம் பொஞ்சாதியா வாழாம, தேசத்துக்குன்னு செயில் போனாங்க. ஈசுவரன் கோயில் வீதிங்க... அய்யா, அம்மா ரெண்டுபேருக்கும் இதா ஊரு.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/315&oldid=1050439" இலிருந்து மீள்விக்கப்பட்டது