உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

 சேவல் எங்கே இருக்கிறது-அதை எப்படி எப்போது அடைவது-என்றெல்லாம் பல எண்ணியது; செய்வதறியாது திகைத்துத் திக்குமுக் காடியது.

அந்நேரம் எங்கேயோ கவனமாயிருந்த சேவலன்னம் திடீரெனத் திரும்பிப்பார்த்தது.பெடையைக் காணவில்லை; எங்கே சென்றதோ-அதற்கு என்ன நேர்ந்ததோ என்று ஏங்கிக் கவன்றது. எப்படியாவது உயிர்க் காதலியைத் தேடிக் கண்டுபிடித் தாகவேண்டுமே! என்ன செய்வது! குறிப்பாகப் பெடை விளையாடிக் கொண்டிருந்த தாமரை மலர்ப் பக்கம் கண்பார்வையை ஆராயவிட்டது. குவிந்திருந்த அந்த மலர் இயற்கைக்கு மாறாகப் பெரிதாயிருந்தமையாலும், ஆடி யசைந்து அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்ததாலும், உள்ளிருந்து எழுந்த ஒலிக்குறிப்பாலும், அம் மலராகிய சிறைக்குள்ளேதான் தன் பெட்டை அடைக்கப்பட் டிருக்கிறது என்று துணிந்து மலர்களின் இதழ்களைக் கிழித்துப் பெடையை விடுதலை செய்தது; உடனே அதனை அழைத்துக் கொண்டு அருகி லிருந்த ஓர் உயர்ந்த தென்னை மரத்தின் மடலில் ஏறிக்கொண்டு மகிழ்ச்சி யடைந்தது. இந்த அன்னப் பறவைகளின் அன்பு வாழ்க்கை எத்துணை இனியது பாருங்கள்! இந்த இன்ப அன்புக் காட்சியினை, மணிமேகலை என்னும் காவியத்தில் உள்ள

     "அன்னச் சேவல் அயர்ந்து விளையாடிய
     தன்னுறு பெடையைத் தாமரை அடக்கப்
     பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடைகொண்டு
     ஓங்கிருந் தெங்கின் உயர்மடல் ஏற"-

என்னும் பாடல் பகுதியில் (மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை, 123-126) காணலாம். இந்நிகழ்ச்சியை எடுத்துக்காட்டியதில் காவியப் புலவர் சாத்தனாரின்