பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

107

என்பதற்கு, 'காப்பியாற்றுக் காப்பியனார்' என்னும் சங்கப் புலவரே சான்றாக மாட்டாரா? நம்மவர்கள் அந்தக் காலத்திலேயே அகில உலகமும் சுற்றி வாணிகம் புரிந்து வந்தார்கள். பர்மாவின் தலைநகராகிய 'ரெங்கோன்' திருவாசகத்தின் பாயிரப் பாடலிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. இதோ பாடலைத் தருகிறேன் :-

“தொல்லை இரும்பிறவிச் சூழும் தளைநீக்கி
அல்லலறுத் தானந்தம் ஆக்கியதே-எல்லை
மருவா நெறியளிக்கும் வர்தவூ ரெங்கோன்
திருவா சகமென்னும் தேன்"

இந்தப் பாடலிலே ரெங்கோன் சொல்லப்பட்டிருக்கிறது பாருங்கள். இப்படியாக, நம்முடைய பழைய இலக்கியங்களிலே இல்லாத செய்திகள் இல்லை- சொல்லாத பொருள்கள் இல்லை. மேலும், நமக்குத் தெரியாததை வெள்ளையன் ஒன்றும் கண்டுபிடித்து விடவில்லை. எல்லாம் அவன் வருவதற்கு முன்பே நம் நாட்டில் உண்டு. எனவே, நம் நாடுதான் மேல் நாடு'

இவ்வாறாக இலக்கிய சாமியவர்கள் பெரும் போடு போடுகிறார். நாம் மணிக் கணக்கிலே பேசினாலும் அவரை மாற்ற முடியாது. குளிர்ச்சியாக அவருக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு நழுவிவிட வேண்டியது தான்.

இதோ இந்தப் பக்கம் திரும்பினால், இரண்டு சாமியார்கள் கையில் திருவோடு வைத்துக் கொண்டு உரையாடுவது கேட்கிறது, இவருள் சின்ன சாமியாரின் பெயர் 'காடு சுற்றிக் கழுவெளி ஆனந்தர்; பெரிய சாமியாரின் பெயரோ 'சர்வ ஜீரணானந்த சுவாமிகள்'. சின்ன சாமி பேச்சைத் தொடங்குகிறார்:-