பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

இருப்பினும்,கோடிக்கணக்கில் செல்வம்இருந்தும் இன்னொருவரிடம் உதவிவேண்டுபவரினும் ஒன்றும் இல்லாவிடினும் ஒருவரிடம் சென்று உதவி வேண்டாதவரே உண்மையான கோடீசுவரர் என்னும் கருத்தை உறுதியாகப் பற்றிக் கொள்ளல் வேண்டும்.

‘இரவாமை கோடியுறும்' என்னும் குறள்பகுதியிலுள்ள 'கோடி’ என்னும் சொல்லுக்குப் பரிதியார், காலிங்கர் ஆகிய பழைய உரையாசிரியர்களைப் போல, அடியேன், கோடி செல்வம் எனப் பொருள் கொண்டுள்ளேன். ஆனால் பரிமேலழகர் கோடி மடங்கு எனப் பொருள் கொண்டுள்ளார். இது பொருந்தாது. இவர்,

'பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி யுறும்’- (816)

“நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி யுறும்-" (817)

முதலிய குறள்களில் கொண்டாற்போல் ஈண்டும் கோடி மடங்கு எனப் பொருள் கொண்டிருப்பது பொருந்தாது. இந்தக் குறள்களில், இன்னாரது நட்பினும் இன்னாரது பகை கோடி மடங்குமேல்’ என்னும் கருத்து அமைந்துள்ளது. இத்தகைய அமைப்பு.

‘கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி யுறும்’ (1061)

என்னும் குறளில் இல்லை என்பதை, ஆழ்ந்த இலக்கியப் பயிற்சி உடையோர் எளிதில் உணரலாம். எனவே, பரி மேலழகரின் பக்தர்கள் எளியேன்மேல் பாயாமல் நடுநிலை நின்று ஆய்ந்து உண்மை காண்பாராக!