உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

 ஒருவன் வந்து "மன்னர் மன்ன! நினக்குப் பின் நின் அரியணையில் அமரும் ஆகூழ் உடையான் நின் இளைய மகனே" என்றனன். அதுகேட்டு மூத்தோனான செங்குட்டுவன் முகம் சுளிக்கக் கண்ட இளையன், "மூத்தோன் இருக்க இளையோன் அரசனாதல்" அறமன்று; எனக் கூறி துறந்து குணவாயிற் கோட்டம் புகுந்தான், செங்குட்டுவன் முறைப்படி அரசனானான்.

செங்குட்டுவன் பெற்ற வெற்றிகள், கொங்கரைக் கொடுகூரில் வெற்றி கொண்டது,31 கடம்பர் என்ற கடலிடை வாழ்வாரை அழித்தது,32 மோகூர்ப் பழையனை வென்று, தன் நண்பன் அறுகைக்கு நேர்ந்த இழிவைத் துடைத்தது,33 கடற்கரை நகராம் வியலூரை வெற்றி கொண்டது,34 நேரிவாயில் எனும் இடத்தில் ஒன்பது மன்னர்களை ஒருபொழுதில் வெற்றி கொண்டது.35 இரும்பாவனப் போரில் பகைவரைப் புறங்கண்டது36 எனப் பலப்பலவாயினும், அனைத்தினும் சிறப்பு வாய்ந்த வெற்றிகள் இரண்டு. ஒன்று, இறந்த தன் தாயின் படிமத்தை கங்கையில் நீராட்டச் சென்றபோது எதிர்த்த ஆரிய அரசர் பலரை வெற்றி கொண்டது,37 இரண்டாவது, கண்ணகி சிலைக்காம் கல் கொணர்வான் வேண்டி, இமயம் சென்றபோது வந்து எதிர்த்த கனக விஜயரை வென்று அவர் தலை மீதே கல்லேற்றிக் கொணர்ந்தது.38

கால வரையறை காணமாட்டாது கிடந்த தமிழக வரலாற்றிற்குக் "கடல் சூழ் இலங்கைக்கயவாகுவையும்"39 அழைத்து விழா வெடுத்ததன் மூலம், தன் காலம் கி. பி. 177—199 எனக் காண வைத்த சிறப்புடையவன் செங்குட்டுவன்.