பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266

பதிற்றுப்பத்து தெளிவுரை

மணிகளையும் பெறுவார்கள். இத்தகைய வளமுடையதும், அகன்ற இடத்தையுடையதுமான ஊர்களைக்கொண்ட சேர நாட்டிற்கு உரியோனே!

பகைவரின் போர்க்களிறுகளைக் கொண்ட பெரும் போரானது அழிவடையுமாறு, நீதான் நின் வேலினை உயர்த்தபடி, ஒளிசெய்யும் வாட்களை ஏந்திய அப் பகைமன்னர்கள் நெருங்கிப் போரிட்டு நின்ற அந்த நிலையினை அழித்து, அவரையும் கொன்றனை. நின் வெற்றிமுரசம் குறுந்தடியால் அடிக்கப்பெற்று முழக்கத்தைக் கொள்ளுமாறு, நீயும் அரிய போர்த்துறைகளை எல்லாம் சிறப்பாகச் செய்து முடித்தனை. பெருங்கடலிடத்தே சென்று வந்த மரக்கலத்தைப் பழுது பார்த்துப்பண்டங்களை விற்போரான வாணிகர், மீளவும் கடலிடைச் செல்லுதற்கேற்றவாறு அவற்றைச் செப்பனிட்டு வலிமைப்படுத்துதலைப்போல, போர் செய்தலினாலே புண்பட்ட பெருங்கையினையுடைய களிற்றுத்தொகுதியின் பெருந்துயரத்தை மருந்திட்டுப் போக்கி, அவற்றை மீளவும் போர்க் களத்திற்கேற்ற வலிமைபெறச் செய்தனை. நின்னிடத்தே வந்து இரந்தோருக்கு அவர் என்றும் வறுமை தீர்ந்து வாழுமாறு பெரும்பொருளை நல்கினை. மென்மேலும் வந்து இரப்போர்க்கும் ஈதலை ஒழியாதவனாக, பகைவரிடமிருந்து கொண்ட குதிரைகளை அவர்கட்கும் வாரி வழங்கினை. அத்தகைய நின் பாசறை இருக்கையினைக் கண்டு செல்வதற்காகவே, யானும் வந்தேன் பெருமானே!

சொற்பொருளும் விளக்கமும்: களிறுடைப் பெருஞ்சமம் களிறுகள் தம்முள் மோதிப் பொருகின்ற பெரும் போர்க்களப் பகுதி. எஃகு - வேல். துதைநிலை - நெருங்கி நிற்கும் நிலை. கொன்று - சிதைத்து அழித்து. கடிப்பு - குறுந்தடி. துறை - போர்த்துறை. போகி - செய்து முடித்து. நீந்திய - சென்று வந்த. மரம் - மரக்கலம். வலியுறுக்கும் - பழுது பார்த்து வலிமைப் படுத்தும். பண்ணிய விலைஞர் - பண்டங்களை விற்போர். புண் ஓரீஇப் - புண்களை மருந்திட்டுப் போக்கி, பெருங்கை - பெரிய கை. தொழுதி - கூட்டம். கழிப்பி - போக்கி. தண்டா- நீங்காத. சிதறு - வாரி வழங்குகின்ற. இருக்கை - பாசறையிருக்கை. செல்கு - செல்லும் பொருட்டு. கால்கொண்டு - மழை கால்கொண்டு. கருவி - இடி மின்னனாலாகிய தொகுதி. வானம் - மேகம். ஏராளர் - ஏர்களை உடையோர். பகன்றை - நீர்க் கொடிவகையுள் ஒன்று; வெள்ளைப்பூ பூப்பது. இப் பூமாலையை அவர் கழுத்திற் சூடிக்