பக்கம்:நூறாசிரியம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

நூறாசிரியம்

அளவுதான் என்னை? எனப் பெருமிதம் படவும் தலைவி கூறுவதாக அமைந்ததிப் பாடல்.

அன்பு - தன் நலம் கெடாமல் பிறர் நலம் பேணக் காட்டும் மனநெகிழ்ச்சி கொள்வார் கொளப்பெற்றார் இருவர்க்கும் நலமே பெருக்கும் மனவுணர்வு. இருவர் மனத்தட்டுகளையும், சமனுற நிறுத்தும் உணர்வுத்துலை (தராசு) கொண்டார் இருவருள் ஒருவரைக் களிப்பவும், பிறிதொருவரைக் கனப்பவும் செய்யாமல், ஒரே பொழுதில் இருவரையும் இன்பினும் துன்பினும் அழுத்தும் வல்லுணர்வு (அன்பு = அல்+பு= இரண்டல் தன்மை. பண்புப் பெயரீறு. அன்பு உலகத்து எல்லா உயிர்களிடத்துங் காணப்பெறுவதாகியதொரு நல்லுனர்வெனினும், இது புழு, பூச்சி போலும் அடி நிலை உயிர்களிடத்து மெய்யான் மிகுந்தும், உளத்தான் குறைந்தும் நின்று, ஒன்றையொன்று ஈர்த்துப் பிணைத்து ஒருணர்வாக்கும் தன்மைத்து என்க. உளத்தான் குன்றி மெய்யான் மிகுதலான், அவ்வுயிர்களிடம் மெய்யுறு புணர்வுக்கே இது பயன்படுவது என்க. எனவே அதற்கொப்பப் பால் வழித் தழுவி நிற்குமென்க. என்னை ? பருப்பொருள்களுள், நேரும் எதிருமாய மின்னாற்றல் கொண்டவை, ஒன்றையொன்று கவர்ந்திழுத்து உடன்படுதல் போல், அடிநிலை உயிர்களுள் ஆணும் பெண்ணுமாய மின்னோட்டம் கொண்டவை ஒன்றையொன்று கவர இது பயன்படும் என்க. இனி, அவற்றினும் உயர்ந்த பறவை, விலங்குபோலும் நடு நிலை உயிர்களுக்கு மெய்யானும் உளத்தானும் ஒப்பத் தோன்றலின், அவற்றிடம் ஒருகால் மனவுணர்வால் பிறிது நலம் பேணற்கும், மறுகால் உடலுணர்வால் ஊறின்பம் நிகழ்த்தற்கும் பயன்படும் என்றறிக இனி, முடிநிலை உயிர்களாகிய மாந்தரிடத்து இஃது உளத்தான் மிகுந்தும் மெய்யான் குறைந்தும் நிற்றலால், வாழ்க்கை பேரளவான் பரிமாறும் மனவுணர்வின் வெளிப்பட்டு நினைவின்பமும், சிற்றளவான் பரிமாறும் உடலுணர்வின் வெளிப்பட்டுப் புணர்வின்பமும் தோற்றுவிக்கும் தன்மைத்தாயது. உடலுணர்வு தேய்வுறுங்கால் இது முழுவதும் மனவுணர்வானே ஆட்பட்டு நிற்கும். உடல் பிரிவுறினும் மனப்பிரிவு அன்பாட்சியில் இல்லை என்க.

அருள் - அன்பின் முதிர்நிலை; தன் நலங் கேடுறினும் பிறர் நலம் பேணக்காட்டும் மன நெகிழ்ச்சி உளத்தின் அரிதாய தன்மை (அரு+உள். அருள்; அரு.அருமை, அரிய தன்மை). அன்பு எதிர்வினை கோளும்; அருள் எதிர்வினை கோளாது. எதிர்வினை என்பது காட்டுதற்குக் காட்டப்படுவதும், நீட்டுதற்கு நீட்டப்படுவதுமாய எதிர்விளைவு. இது பயன் அடிப்படையது. இது கடைக்கீழ்நிலை உயிர்கள்பாலும் தலைமேல்நிலை உயிர்களால் செலுத்தப் பெறுவது அருள் மேனிலை உயிர்களின் மீமிசை மாந்தக் குணம் துன்ப விளைவையும் இன்ப நேர்ச்சியையும் ஒன்றெனவே கருதும். தூய உளத்தில் தோன்றி வெளிப்படுவது அருள். பெரும்பாலும் புறத்தே புலப்படத் தோன்றாது அகத்தின் நல்லுணர்வான் கண்டறிவது. அருளாட்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/76&oldid=1221650" இலிருந்து மீள்விக்கப்பட்டது