66
நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி
இவன், சேரமான் பாமுளுர் எறிந்த, நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி என அழைக்கப் பெறுவன். இவன் கொற்றம், கொடை நலச் சிறப்புகளைப் புலவர், ஊன் பொதி பசுங்குடையார் பாராட்டியுள்ளார்.86 இவன், கரிகால் பெருவளத்தானின் தந்தையாகிய, உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னியே என்பது, உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி என்ற தலைப்பின் கீழ் விளக்கப்பட்டுள்ளது.
போரவைக்கோப் பெருநற்கிள்ளி
உறந்தையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழ அரசன் தித்தன் என்பானின் மகன். யாது காரணத்தாலோ தந்தையோடு பகை கொண்டு, உறந்தையை விடுத்து, முக்காவல் நாட்டைச் சேர்ந்த ஆமூர் சென்று வாழ்ந்திருந்தான். ஆமூர் மல்லர்கள் நிறைந்த ஊர். போரவைக்கோவும், மற்போர் வல்லவன். அதனால், ஆமூர் மல்லனுக்கும், இவனுக்கும் பகை வளர, ஒருநாள் போரிடத் தொடங்கிவிட்டனர். போரில் போரவைக்கோவே வெற்றி பெற்றான். அவன் ஆற்றிய மற்போர் திறங்கண்டு மகிழ்ந்த புலவர் சாத்தந்தையார், "மகன் பெற்ற வெற்றியைத் தித்தன் காணக் கொடுத்து வைத்திலனே" என வருந்தினார்.87 அவன் போர்த் திறம் கண்டு, அவன்பால் காதல் கொண்டு பாராட்டினார் பெருங்கோழி நாயகன் மகள் நக்கண்ணையார் என்ற புலவர் பெருமாட்டி.