உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

இப் பேரரசுகள் மூன்றும், கிழக்கே சீனப்பேரரசும், மேற்கே உரோமானியப் பேரரசும் சிறந்து விளங்கிய அக்காலத்திலேயே, அவற்றோடொப்பச் சிறந்து விளங்கிய பழமையும் பெருமையும் உடையனவாகும்; இவ்வரசுகள் இன்ன காலத்தே தோன்றின என்றோ, இன்னாரால் தோற்றுவிக்கப்பட்டன என்றோ, அறுதி இட்டுக் கூறமாட்டாப் பழமை வாய்ந்தன. இவ்வரசுகளின் பழமைகாண முற்பட்டார் அனைவரும், “கல் தோன்றி, மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி”, “படைப்புக் காலம் தொடங்கி மேம்பட்டு வரும் குடிகள்” என்றே கூறி அமைவராயினர். வடமொழி இராமாயண ஆசிரியர் வால்மீகியராலும், அம்மொழிப் பேரிலக்கணப் பேராசிரியர் காத்தியாயனராலும் தங்கள் நூல்களில், சீரும் சிறப்பும் பெற்ற நாடுகளாக, இந்நாடுகள் கூறப்பட்டுள்ளன. இந்திய நாட்டின் பெரும் பகுதியினை வென்று தன் ஒரு குடைக்கீழ் வைத்து உலகாண்ட மவுரியப் பேரரசன் அசோகன், “என் ஆட்சியோடொத்த, என் ஆட்சிக்குட்படாப் பேரரசுகள் சேர, சோழ, பாண்டிய அரசுகள்” எனப் பாராட்டியுள்ளான் எனின், இவ் வரசுகளின் பழமை, பெருமைகளை மேலும் விளக்குதல் வேண்டுமோ? வடமொழியின் முதற்பெரும் காவியமாகிய வான்மீகி இராமாயணமும், வியாசர் பாரதமும், மூவேந்தர் நாட்டின் நனிசிறப்புகளையும், அவ்வரசர்களின் ஆற்றற்பெருமையையும், பாராட்டிக் கூறுகின்றன, என்னே தமிழ்நாட்டின் தொன்மை! என்னே தமிழரசர்தம் பெருமை!