பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

தனித்து மேற்பட்டுவிளங்கும் தன்னுண்மையாகிய சிறப்பியல்பும் ஒருங்குணர்த்துவது மேற்குறித்த திருக்களிற்றுப்படியார் பாடலாகும். இது திருக்குறளின் முதற் குறளிலமைந்த 'ஆதிபகவன் முதற்றேயுலகு' என்னும் தொடரால் உணர்த்தப்படும் இறைவனது பொதுவும் சிறப்புமாகிய இருவகை இலக்கணங்களையும் நன்கு புலப்படுத்தும் நிலையில் அமைந்துள்ளமை காணலாம்.

தொன்றுதொட்டுத் தமிழ்முன்னோர்களால் வழிபடப் பெற்றுவரும் மாதொரு பாகனாகிய இறைவனது தொன்மைக் கோலத்தினை உளங்கொண்ட திருவருட் பிரகாச வள்ளலார்,

திருவிளங்கச் சிவயோக சித்தியெலாம் விளங்கச்
சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்
தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே
திருக்கூத்து விளங்க ஒளி சிறந்த திருவிளக்கே;
உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க
உலகமெலாம் விளங்க அருள் உதவு பெருந் தாயாம்
மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க
வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்த சிவக் கொழுந்தே

(திருவருட்பா - 3268)

எனவரும் திருப்பாடலில் தில்லையம்பலப் பெருமானை அம்மையப்பராகப் பரவிப் போற்றியுள்ளார்.