உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

திருமந்திரம்


ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான்” என வரும் திருவெம்பாவைத் தொடரில் திருவாதவூரடிகள் தெளிவாக விளக்கியுள்ளார். “ஆதிபகவன்” எனத் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரும், “மலைமகள் பாகமாக அருள் காரணத்தின் வருவார்” என ஆளுடைய பிள்ளையாரும், ‘அம்மையே அப்பா’ எனத் திருவாதவூரடிகளும், 'சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த தனி முழு முதலுமாய்’ எனப் பூந்துருத்தி நம்பிகாட நம்பியும், 'அம்மையப்பரே யுலகுக்கு அம்மையப்ப ரென்றறிக’ எனத் திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனாரும் அருளிய மெய்ம்மொழிகள் இங்கு நினைக்கத் தக்கனவாகும்.

இனி ‘அவன் இன்னருள் இரண்டு’ என இயைத்து இறைவன் உயிர்கட்குச் செய்யும் திருவருள் அறக்கருணை, மறக்கருணை என இரண்டாகும் எனப் பொருள் கொள்ளுதலும் பொருந்தும். அறக்கருணை அனுக்கிரகம். மறக் கருணை-திரோதானசத்தி. மூன்று என்றது, அருவாகித் தோன்றாத இறைவனைக் குறித்து வழிபடுதற்குரிய குரு லிங்க சங்கமம் ஆகிய மூவகைத் திருமேனிகளை; அருவம் உருவம் அருவுருவம் என்னும் மூன்றெனவும் அவன், அவள், அது என்னும் மூன்றெனவும் கூறுவதும் உண்டு. நான்கு என்றது. நான்மறைகளை. நால்வேதங்களை உயிர்கள் உணர உணர்த்தியருளினான் என்பார் ‘நான்கு உணர்ந்தான்’ என்றார், ஐம்பொறிகளை வெல்லும் ஆற்றல் மக்களுக்கு இயல்பாக அமையவில்லை. அத்தகைய ஆற்றலே அவர்களுக்கு வழங்கி உய்விக்க வல்லவன் இறைவன் ஒருவனே என்பதுணர்த்துவார் ‘ஐந்து வென்றனன்’ என்றார். ‘பொறிவாயில் ஐந்தவித்தான்’ எனத் திருவள்ளுவரும் ‘வென்றானைப் புலனைந்தும்’ என அப்பரடிகளும்,

“பொறிவாயில்இவ் வைந்தினையும் அவியப் பொருது
           உன்னடியே புகுஞ்சூழல் சொல்லே”