உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வளர்ப்பு மகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

வளர்ப்பு மகள்

போகலாம்மா, வீட்டுக்குப் போகலாம்" என்று சிடுசிடுப்புடன், செல்லக் கிறுக்குபோல் முணுமுணுத்துக்கொண்டு இருந்த மல்லிகா திடீரென்று எழுந்து, "சரி, நீங்கள் இருந்துட்டு காலையிலே வாங்க. நான் பஸ்ல போறேன்" என்று சொல்லிவிட்டுப் புறப்படப் போனாள். உடனே, செல்லம்மா, கண்ணில் பெருக்கு எடுத்து விழப்போன நீரை நிறுத்தி வைத்துக்கொண்டே, "நீயும் இந்த வீட்லதாம்மா பிறந்தே. இங்க இருக்கவங்கெல்லாம் உன் கூடப் பிறந்தவங்கம்மா. கொஞ்சநேரம் இருக்கப்படாதா?" என்றாள்.

அப்படியும் மல்லிகா புறப்படப் போனபோது, அவள் கையை கீழே உட்கார்ந்து கொண்டே பார்வதி இழுத்தபோது, பெருமாள், தன்னை மீறிவிட்டார். குழந்தைங்க எல்லாம் எவ்வளவு பாசமாய் பார்க்குதுங்க. மருமகப்பிள்ளைகூட எவ்வளவு மரியாதையாய்ப் பார்க்கிறார். இவளைப் பார்த்ததும், எதுக்கும் மசியாத என் மனங்கூட எப்படி கலங்குது? இவளுக்கு ஏன் புரியல..? புரியாட்டால் போகட்டும்.'

இயல்பிலேயே துடிப்புக்காரரான, நாற்பத்தெட்டு வயது பெருமாள் கத்தினார்:

"இவள் எனக்கு பிறந்திருக்க மாட்டாள். சனியன் போனால் போகட்டும். அவளோட கையை விடு... மூதேவி போனால் போகட்டும்..."

எல்லோரும் வாயடைத்துப் போனார்கள். மேற்கொண்டு ஏதோ பேசப்போன பெருமாள், ஆவேசத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்காக, வெளியே போய் நின்றார். பார்வதி, பிரமித்தவளாய், ஆகாயத்தையே பார்த்தாள். செல்லம்மா கைகளை நெறித்தாள். பிள்ளைகள் கலங்கிப்போய் நின்றன.

எவரிடம் இருந்தும், இந்த மாதிரியான வார்த்தைகளையோ, அதட்டல்களையோ கேட்டு அறியாத மல்லிகாவிற்கு, முதலில் ஒன்றும் ஓடவில்லை. 'ஏன்... இந்த 'ஆளு' இப்படிப் பேசுறாரு... ஏன் இப்படி மூதேவின்னு சொல்றாரு..?'

மல்லிகா, தன் கைகளைப் பிடித்த உண்மை அம்மாவை உதறிக்கொண்டே, மடமடவென்று வெளியே வந்து, காரில் உட்கார்ந்துகொண்டு, குலுங்கிக் குலுங்கி அழுதாள். உள்ளே இருந்த பார்வதி, அதுவரைக்கும் சிரித்துக்கொண்டே பேசியவள். "அவள் போனபிறகு, எனக்கு மட்டும் என்ன வேலை இருக்கு? நாகரிகம் தெரியாத வீட்டுக்கு வந்தால் அவமானந்தான் கிடைக்கும். அவள் வரமாட்டேன்னுதான் சொன்னாள். நான்தான் நாலுபேரு தப்பா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வளர்ப்பு_மகள்.pdf/32&oldid=1133678" இலிருந்து மீள்விக்கப்பட்டது