16 சு.சமுத்திரம்
"அவன் அண்ணன் எல்லா டிக்கெட்டையும் வாங்கி ஆட்களை விட்டான் அப்படியும் நிறைய பேரு மறந்துட்டாங்க', என்று முன்பு முணுமுணுத்த அதே குரல் இப்போது அதைவிட சன்னமாக ஒலித்தது. அது ஊர் காதில் ஒலிக்கவில்லை.
மாடசாமி விஷயத்துக்கு வந்தார்.
"சரி....பரமசிவத்துக்கு...வெற்றி விழா... கண்ணனுக்குப் பாராட்டு விழா... என்ன சொல்றீங்க?"
இதுவரை பேசாத மனிதர் ஒருவர் பேசினார்.
"என் மகன் ஒரு பேப்பர்ல ஆசிரியருக்கு கடிதமுன்னு எழுத அது வந்திருக்கு. காட்டாம்பட்டிக்காசி என்கிற பேர்ல வந்திருக்கு. நம்ம ஊரு பேரு பேப்பர்ல வர அளவுக்கு எழுதியிருக்கான். இதுக்கு பாராட்டு வைக்க நாதியில்லையா?”
நாதியில்லை என்பதுபோல், ஒரு குரல் இடித்தது.
"வே! உம்ம பையன் ரெண்டு பக்கம் எழுதின சங்கதி எனக்குத் தெரியும்...அதை.... அந்தப் பேப்பர்காரன் ரெண்டு வரியா குறைச்சதும் எனக்குத் தெரியும். இதுக்கு ஏன் பாராட்டுங்கறதுதான் எனக்குத் தெரில..."
"வே... மாப்பிள்ளை அந்த ரெண்டு தாளும் வேற பையன் எழதிக்கொடுத்தான்.... வராதுன்னு நினைச்சி எழுதிக்குடுத்தான்...வந்துட்டு. சங்கதி எனக்குத்தான் தெரியும்"
“என்னதான் எழுதியிருக்கான்?