உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௦ ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும் 21

"நான் பொய் சொல்ல விரும்பல. வரியைக் குறைக்க எனக்கு அதிகாரம் இல்ல.இதுக்குத்தான் பஞ்சாயத்துக்கு அதிக அதிகாரம் வேணுமுன்னு கேட்டு யூனியன்ல கரடியாய் கத்தறேன். ஒருவனும் கண்டுக்கமாட்டாங்கறான்' என்றார் பரமசிவம்.

"சரி வீட்டு வரியை குறைக்க முடியாட்டி... தொழில் வரியை குறைச்சுக்கலாம்' என்று காடசாமி விவகாரத்துக்கு முற்றுப்புள்ளியும், நன்கொடைக்கு ஆரம்பப் புள்ளியும் வைத்தார்.

ஒரு காய்ந்த வயிறுக்காரர், ஜீவமரணப் பிரச்சினை ஒன்றை சபையில் வைத்தார்.

"ஐம்பெரும் விழா, அஞ்சுநாளு நடக்கும்.வெளியூர்ல இருந்துல்லாம் ஆளுங்க வர்ரதுக்கு நம்ம ஊரு வண்டிகள அனுப்பணும்.வண்டிக்காரனுக்கு வாடகை வேண்டாமா? அது தொலையட்டும். அஞ்சு நாளும் ஜனங்க எங்கேயும் போகாம விழாவிலே கலந்துக்கணும்.நம்ம ஊர்ல முக்கால்வாசி அன்றாடங்காய்ச்சி வேலைக்குப் போகாட்டா அரிசி வேகாது. அவங்க சாப்பாட்டுக்கு என்ன பன்றது?"

பரமசிவம், பெருந்தன்மையோடு பாரியானார்.

"அதுக்கும் நம் கூட்டுறவுத் தலைவர்கிட்ட பேசிட்டேன்,சங்கத்துல கடன் வாங்கினவன் திருப்பித் தரவேண்டாம். வீட்டுவரியை இப்போதைக்கு கட்ட வேண்டாம். ஏலத்துல பணம் எடுத்தவன் இந்த அஞ்சு நாளைக்கு கூலியை எடுத்துக்கலாம். வெளியூர்ல இருந்து விழாவுக்கு வர்ரவங்களுக்கு, பள்ளிக்கூடத்துல மூணு மாசத்துக்குப் போடுற மதிய உணவை, அஞ்சு நாளைக்கும் போட்டுடலாம்".