உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❍ ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

157

தாத்தாவிடம் இருந்து சரியான பதில் கிடைக்குமுன்னர், நானோ... என் மகன் அகத்தியனோ... இந்த இடத்தைவிட்டு அகலப்போவதில்லை..."

அப்போதும், ஆதிசேசன்தான் அசைந்து கொடுத்ததே தவிர, அந்த வாகனாதிபதி அல்ல... சிரித்தார்... ஒரே சிரிப்பாகச் சிரித்தார். பெருஞ்சிரிப்பாய் சிரித்தவர் பின்னர் வாயடக்கிப் பார்த்தார். கண்ணெதிரே, அவருடைய மருமகன் திருமுருகன்... கண்களில், சூரபத்மனை வதம் செய்யப் போனபோது கூட இல்லாத நெருப்புக் கோளங்கள்... தோளுக்கு மேல் போன வேல்...

தமிழ்க் கடவுளான முருகன், தாய்மாமனும், மாமனாருமான கேசவனைப் பார்க்காததுபோல் பார்த்து, 'மாப்பிள்ளை முறுக்கோடு பேசினான். பேசவில்லை... சூளுரைத்தான்...

'எல்லா இனத்தையும், வாழ்வாங்கு வாழவிட்டு, என் இனத்தை மட்டும் தளர விட்டவரை விடமாட்டேன்... எல்லா இனத்தையும் பரிணாமப்படி வளர்வதற்கு விதியமைத்து... கன்னடனை நளினமாக்கி, மலையாளியை அறிவாளியாக்கி, சினிமாத் தெலுங்கனையும் மீட்டு, மராட்டியனை மலரச் செய்து, யாதவர்களை எழுச்சியுறச் செய்து, என் தமிழனின் தலைவிதியை மட்டும் மட்டமாக எழுதிய பிருமனை, மீண்டும் சிறையில் அடைக்கப் போகிறேன். என் தமிழ் மக்களின் இந்த நிலைமைக்கு காரணமான அந்த பிரும்மனை நான் சிறையெடுப்பதை, யாராலும் தடுக்க முடியாது..."

எல்லாம் வல்ல முருகனின் சூளுரை கேட்டு, நாராயணன் தவிர, அனைவரும் திடுக்கிட்டனர். ஆனால் ஆதி மூலமோ... எகத் தாளமாய், யாருக்கோ சொல்வது போல் விளக்கினார்.