உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொருள் மிக்க பூஜ்யம்

27


ஆனால் இந்தப் புலி நான்கைந்து நாய்களைக் கொன்றுவிட்டு, அந்த வட்டத்தில் இருந்து மீண்டது. குட்டியை அனைத்துக் கொண்டுதான் பாய்ந்தது. என்றாலும் அம்மாவைப்போல் வெளியேறும் அர்ஜுன வியூகம் தெரியாத, அந்த அபிமன்யு புலி அந்த நாய்களின் வாய்களுக்கு மாமிசமானது.

அந்தப் புலியால் இப்போது நினைக்கவும் முடியவில்லை. நினைக்காமலும் இருக்க முடியவில்லை. கேவலம், ஒரு உருமலுக்கு பொறுக்காத காட்டுப் பொறுக்கிகளிடம் மானமிழந்ததை அதனால் தாங்கமுடியவில்லை. குட்டியைக் காக்க முடியாமல் பேடியாய் ஓடிவந்த அவமானம். ஆகையால் இரைதேடப் போகாமல், அல்லாடிக் கிடந்தது. தன்னம்பிக்கை அற்று தவித்துக் கிடந்தது.

சும்மாவே கிடக்கும் அந்தப் புலியை, அந்தக் கன்றுகுட்டி ஆச்சரியமாய் பார்த்தது.' இந்தப் புலியைப் பாருங்கள்' என்பது மாதிரி கண்ணில் படும் சைவ மிருகங்களிடம் சுட்டிக்காட்டப் போவது போல் அது எதிர் திசையைப் பார்த்த ஒரு நிமிடத்தில் மிரண்டது. பிறகு அந்தத் திசையை கனன்று பார்த்தது. எதிர்த் திசையில் அதே இரண்டு காட்டு நாய்கள் குத்துக்காலிட்டு உட்கார்ந்துள்ளன நாக்குகள் வாய்களுக்கும் காலிருப்பதுபோல் தொங்குகின்றன.

அந்தக் கன்றுகுட்டிக்கு மீண்டும் ஆத்திரம்.

அந்தப் புலியைக் கேள்வியோடு பார்த்தது. ஆனாலும் அந்த கிழட்டு ராஜா சும்மா இருப்பதைப் பார்த்து விட்டு. யதேச்சையாகவோ அல்லது ஏதோ ஒரு தற்கொலை அல்லது தாக்குதல் உணர்விலோ, அந்தப் புலியின் அருகே நெருக்கியடித்து சென்றது. அதன் வாயில் முகம்படும்படி புரண்டது. இழப்புக் குள்ளான மனிதருக்கு உணவை வாயில் ஊட்டினால், அவர் இறுதியில் எப்படி அதை உண்பாரோ, அப்படி அந்தப் புலியும் மாறியது. அந்தக் கன்றுக்குட்டியின் ரத்தக்கசிவு வாயில் பட்டதால் பசிப்பிணி, பாசப் பிணியை துரத்திவிட்டது. உடனே, அந்தக் கன்றின் கழுத்தை கவ்வி அதற்கு உயிர் விடுதலை கொடுத்தது. பின்னர், அதை அவசர அவசரமாக தின்று கொண்டிருந்தது.