உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

சு.சமுத்திரம் ❍

உடனே முழக்கங்கள்....

"பாகற்காய் கசப்பை போக்க வழிகாட்டிய பைங்கிளியே..! கண்கண்ட தெய்வமே!!... உன்கண்டுபிடிப்பு:ஐசக் நியூட்டனின் புவிஈர்ப்பு தத்துவத்தைவிட, ரைட் சகோதரர்களின் விமான கண்டுபிடிப்பை விட மேலான கண்டுபிடிப்பம்மா... இதற்காகவே வரலாறு உன்னை இனம் காட்டும் தாயே... இனம் காட்டும்..."

ஆசாமிகள், கிண்டல் செய்கிறார்களோ என்பது போல் அம்மா பார்த்தார்... இல்லவே இல்லை... அத்தனைக் கண்களிலும் பக்தி பரவசம்... அத்தனை மேனிகளிலும் நெளிவு சுழிவு... இதனால் உற்சாகப்பட்ட அன்னை சப்பாத்திக்கு மாவு பிசையும் சமையலாளியைப் பார்த்தார். அவரோ அம்மாவைப் பார்த்த பரவசத்தில் சப்பாத்தி மாவில் உப்பைப் போடுவதற்குப் பதிலாக இரண்டு கிலோ உப்புக் குவியலில் ஒரு பிடி சப்பாத்தி மாவைப் போட்டு பிசைந்தார். உடனே அன்னைக்கு ஆத்திரம் வந்தது...


"அடே... என்ன காரியம் செய்கிறாய்... உப்பில்லா பண்டம் மட்டும் அல்ல... உப்பான பண்டமும் குப்பை யிலே... இது தெரியாதா..."

"தெரியும் தாயே தெரியும்... ஆனாலும் உன் திருப்பார்வையில் உப்பே மாவாகும்... மாவே உப்பாகும்... என்பதும் தெரியும்... ஏனென்றால் நீ சர்வ சித்துக்கும் ஈஸ்வரி... இந்த உப்பை மாவாக்க சர்வேஸ்வரியான உனக்கு எளிது தானே... உப்பின் மகத்துவத்தை உணர்த்திய உத்தமியே... உப்புள்ள காலம் வரை நீ வாழ வேண்டும் தாயே... நீ வாழ்வதைக் கண்டு நெஞ்சாற மகிழ நாங்களும் வாழ வேண்டுமென்று அருள் பாலிப்பாய் தாயே..."