உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகம் தெரியா மனுசி

15


நீர்வீழ்ச்சியாக விழுந்து கொண்டிருந்தது. அந்த அதிகாரிகளும், ஏவல் பூதங்களாக வந்தவர்களும், வெட்கத்தைவிட்டு “அய்யோ.. அம்மா....” என்று கதறினார்கள். வலிபொறுக்க முடியாமல் அங்குமிங்குமாய் துள்ளினார்கள். அதே சமயம் அவளைப் பிடிங்க பிடிங்க என்று ஒலமிட்டார்கள். ஓலமிட்ட வாய்க்குள் கூப்பனி கூழ் ஊடுருவி, நாக்குகளை சுட்டெரித்ததுதான் மிச்சம்.

ராசம்மா, மேற்கோர தொழுவத்தை ஊடுருவி, இன்னொரு குடிசை வரிசையின் இடுக்கு வழியாக ஓடி, ஒரு எருக்குழியைத் தாண்டி, ஒரு வீட்டின் செறுவையைத் தாண்டினாள். அப்போது ‘பிடிங்க பிடிங்க' என்ற சத்தம், அடுத்த பக்கத்து அடுக்கு குடிசை வரிசையிலும் எதிரொலித்தது. நடந்ததை நேரில் பார்த்த பெண்கள் ராசாத்தியை பிடிப்பதுபோல் பாவலா செய்து, சிக்கிரமாக போகும்படி கண்ணசைத்தார்கள்.

ஊருக்கு வெளியே வந்து குதிகால் பாய்ச்சலில் ஒடி, காலங்காலமாய் ஓடிக்கொண்டிருக்கும் பழையாற்றுக்குள் ராசம்மா இறங்கினாள். வடக்கு மலையில் உற்பத்தியாகி, நாஞ்சில் நாடு முழுக்க, கிழக்கு கடல்நோக்கி நெடுநீளமாக பாயும் அந்த ஆறு, அவள் முட்டிக்கால்கள் வரை வியாபித்து அவளைச் சில்லிடச் செய்தது. ராசாத்தி சிறிது நிதானித்தாள். கரிகாலனின் காவிரி கல்லணையைப் போல் எந்தக் காலத்திலோ வலுவாக கட்டப்பட்ட அந்த ஆற்றின் கல்பாலத்தின் அடிவாரத் துண்கள் ஒன்றில் அப்படியே சாய்ந்து, ஆசுவாசப் படுத்திக் கொண்டாள். சாலைப்பக்கம், ஈட்டியும், வேல்கம்புமாய் ஆட்கள் ஓடிவருவது கண்ணுக்கு தெரியவில்லை என்றாலும், காதுக்குக் கேட்டது.

ராசம்மா, நதியோர தாழை மடல்களுக்குள் தவழ்ந்து, தவழ்ந்து, நாணற்செடிகளின் நடுவே பாய்ந்து, ஒணான் செடி குவியல்களுக்குள் உட்புகுந்து, பூணிக்குருவிகளும், வால்குருவிகளும் பயந்து பறக்க, காட்டுப்பூனைகள் மரங்களுக்குள் தாவ, பத்து, பன்னிரெண்டு மைல் தூரம் ஆமையாகவும், முயலாகவும், அணில் பாய்ச்சலாகவும், நகர்ந்தும், தவழ்ந்தும், தாவி யும் போய்க் கொண்டிருந்தவள், களைப்பு மேலிட்டு மூச்சு முட்டியபோது ஒரிடத்தில் கரையேறினாள்.