40 பாலைப்புறா
கலைவாணியின் பக்கம் வந்து ‘வெள்ளையன்பட்டி கீப் இட் அப்’ என்று மேடம் போலவே, கண்களை அகல விரித்து நடித்துக் காட்டினார்கள். இவர்களைத் துரத்திப் போன வாடாப்பூவையும், தேனம்மாவையும், கலை பிடித்துக் கொண்டாள்.
சிறிது தொலைவில், மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் சுகுமார், ஐந்தாறு டாக்டர்களோடும், இதர நான்கைந்து பேருடனும் வெள்ளையும் சொள்ளையுமாய் நின்றார். அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டார். இன்னும் இரண்டு மணி நேரத்தில், மாவட்டத் தலைநகர் போயாக வேண்டும். வளர்ச்சி மன்றக் கூட்டம்; அங்கே போகா விட்டால், கலெக்டர் தாளிப்பார். இங்கே நிற்காவிட்டால், எம்.எல்.ஏ. தாளிப்பார். எல்லாம் ரெடி. இந்த எம்.எல்.ஏ. தான் ரெடியாகல.
இதற்குள் ஆளுயர பூப்பிணத்தைத் தூக்கிக் கொண்டு வந்த கட்சிக்காரர்களை பார்த்து சல்யூட் அடித்தபடியே சுகுமார் ஓடினார். அவர் ஒட, அவர் பின்னால், அத்தனை டாக்டர்களும் ஒட, ஒரே அமர்க்களம். டாக்டர் சந்திரா மட்டும் நின்ற இடத்தில் நின்றாள்.
கலைவாணி, தோழிகளோடு பேசிக் கொண்டிருந்தாலும், அவள் கண்கள், சிறிது தொலைவில் வேலையில்லாப் பட்டதாரிகளின் முற்றுகையில் நின்ற மனோகர்மீதே மொய்த்தன. வந்தவுடனேயே வணக்கம் போட்டாள். அவனோ முகத்தை மட்டும் ஆட்டினான். அதுவும் லேசாய்; பழைய சிரிப்போ குழைவோ இல்லை. இவ்வளவுக்கும் அவன் புதியவன் அல்ல. பள்ளிக்கூடத்தில், மூன்று வகுப்புகளுக்கு மேல் படித்தவன். கல்லூரி விடுமுறையில் இருந்து ஊருக்கு வரும் போதெல்லாம், இருவரும் மனம் விட்டுப் பேசவில்லையானாலும், வாய்விட்டுப் பேசி இருக்கிறார்கள். ஒருவரை ஒருவர், சந்திக்க முயற்சி செய்யவில்லையானாலும், தற்செயலாய் சந்தித்த போதெல்லாம், ஐந்தாறுநிமிடம் நின்று பேசுவதுண்டு. மனோகரை, கலைவாணிக்குப் பிடிக்கும். அவனோடு பேசிய பேச்சு, அறிவுப் பூர்வமான பேச்சு. நல்லவர்களைக் கணக்கிட அவனையே அளவுகோலாய் வைத்துக் கொள்ளலாம் என்பது போன்ற கற்பிதம்; உடம்பை ஆட்டாமல், முகத்தைச் சுட்ட செங்கல்லாய் ஆக்காமல், மண்ணாய்க் குழைந்து காட்டும் பரிவும், பாசமும், அவளைக் காதலியாய் ஆக்கவில்லையானாலும், அவன் மீது கவனம் செலுத்துகிறவளாய், ஆக்கிவிட்டது. ஆறடிக்கு சிறிதே குறைந்த உயரம், அந்த உயரம், அவனை ஒட்டகச் சிவிங்கியாக்காமல், மத யானை போன்ற மதர்ப்பை கொடுத்தது. அவன் சதைத் திரட்சி, இவளை காமுகியாய் ஆக்கவில்லையானாலும், ஒரு ரசிகையாய் ஆக்கியதுண்டு. மனோகருக்கு சிறப்பு, நடத்தையா அல்லது அழகா என்று ஒரு பட்டிமன்றம் போட்டால்