இயல் பதிமூன்று
உலகம்
165. அதருமத்தில் செல்ல வேண்டாம்; அசட்டையாக வாழ வேண்டாம். தவறான கொள்கையைக் கைக்கொள்ள வேண்டாம். உலகத்தின் (பற்றோடு) உறவு கொள்ள வேண்டாம். (1)
166. விழித்தெழுக! கருத்தில்லாமல் இருக்க வேண்டாம் தரும ஒழுக்கத்தைக் கடைப்பிடி. தரும வழியில் நடப்பவனுக்கு இகத்திலும் சுகம். பரத்திலும் சுகம். (2)
167. தரும ஒழுக்கத்தில் நடப்பாயாக, தீயொழுக்கத்தில் செல்லவேண்டாம், தரும வழியில் நடப்பவனுக்கு இகத்திலும் சுகம், பரத்திலும் சுகம். (3)
168. வையகத்தை நீர்க் குமிழியாகவும், கானல் நீராகவும் காண்பவனை எமதர்மன் கண்டு கொள்ள முடியாது. (4)
169. இந்த உலகம் அரசனுடைய அலங்கரிக்கப் பெற்ற தேர் போல் ஜொலிப்பதை வந்து பார்! பேதைகள் இதிலே ஆழ்ந்து விடுகிறார்கள். ஞானிகளுக்கு இதிலே பற்றில்லை. (5)
170. முன்னால் சிந்தனை யற்றிருந்து, பின்னால் விழிப் படைந்து தெளிந்தவன், மேகத்திலிருந்து விடுபட்ட சந்திரனைப்போல் இந்த உலகை ஒளிபெறச் செய்கிறான். (6)
171. பாவத்தை நல்வினையால் மறைக்கும் ஒருவன் மேகத்திலிருந்து விடுபட்ட சந்திரனைப்போல், இந்த உலகை ஒளிபெறச் செய்கிறான். (7)