இயல் இருபத்திரண்டு
நரகம்
304.உண்மையா யில்லாததைப் புனைந்துரைப்பவன் நரகத்தை அடைகிறான்; ஒன்றைச் செய்துவிட்டு, ‘அதை நான் செய்யவில்லை’ என்போனும் அப்படியே அடைகிறான். மரணத்திற்குப் பின் மறுமையில் இருவரும் நிகராகி, நரகம் என்ற ஒரே இடத்தை அடைகின்றனர். (1)
305.காஷாய ஆடை தரித்தவர்களிலும் தம்மை அடக்கிக் கொள்ளாமல் பாவ கருமங்களைச் செய்வோர் பலர் இருக்கின்றனர்; இத்தகையோர் தங்கள் பாவச் செயல்களால் நரகத்தை அடைகின்றனர். (2)
306. புலனடக்கமில்லாத தீயொழுக்க முள்ளவன் நாட்டு மக்கள் (அளிக்கும்) உணவை உண்பதைக் காட்டினும், அனல் வடிவமான பழுக்கக் காய்ந்த இரும்பு உருண்டையை முழுங்குவதே நலமாம். (3)
307. மற்றொருவனுடைய தாரத்தை இச்சிக்கும் பேதை நான்கு விதமான பயன்களை அடைவான்; பாவம், அமைதியான உறக்கமின்மை, மூன்றாவதாகப் பழி, நான்காவதாக நரகம். (4)
308. பாபம் ஏற்படுகிறது; அத்துடன் பாவிகளுக்குரிய தீய கதியும் அடைய வேண்டும்; அஞ்சி நடுங்கும் ஒருத்தியுடன் ஒருவன் அஞ்சிக்கொண்டே துய்க்கும் இன்பம் மிகவும் அற்பமானது; அரசனும் கடுமையான தண்டனை விதிக்கிறான். ஆதலால் எந்த மனிதனும் பிறன் மனைவியை விரும்பலாகாது. (5)