உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்ம பதம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் பதினெட்டு

குற்றம்


233. இப்போது உலர்ந்த சருகுபோல் ஆகிவிட்டாய்; எமதூதர்கள் உன் அண்டையில் வந்திருக்கின்றனர். நீயும் பிரிவதற்கான வாயிலில் (வந்து) நிற்கிறாய், ஆனால், நீயோ செல்லும் வழிக்கு வேண்டிய உணவு எதுவும் தயாரிக்கவில்லை. (1)

234. நீ (அடைக்கலம் புகுவதற்கான) ஒரு தீவை [1] தயாரித்துக்கொள்; விரைவாக முயற்சி செய்; அறிஞனாக இரு. உன் மலங்கள் துடைக்கப்பட்டுப் பாவங்கள் நீங்கியதும் நீ மேலோர் தங்கும் சுவர்க்கத்தை அடைவாய். (2)

235.உன் வாழ்க்கை முடியப் போகிறது. எமன் சந்நிதிக்கு நீ வந்துவிட்டாய். வழியிலே தங்கும் இடமும் வேறில்லை. நீயோ செல்லும் வழிக்கு வேண்டிய உணவு எதுவும் தயாரிக்கவில்லை. (3)

236. நீ (அடைக்கலம் புகுவதற்கான) ஒரு தீவைத் தயாரித்துக் கொள்; விரைவாக முயற்சி செய்; அறிஞனாக இரு. உன் மலங்கள் துடைக்கப்பட்டுப் பாவங்கள் நீங்கியதும், மறுபடி பிறப்பும் மூப்பும் உனக்கில்லை. (4)


  1. தீவு-பிறவிக் கடலில் தவிப்பவனுக்குத் தீவு தாரகமாகும்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/60&oldid=1381859" இலிருந்து மீள்விக்கப்பட்டது