பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 விமானங்களிலிருந்தே எறியவேண்டியிருந்தது. ஆயினும் நம் தரைப் படைக்கு உதவியாக நமது விமானப்படையைச் சேர்ந்த ஒரு விமானத்தைக் கூட உபயோகிக்கவில்லை. காயமடைந்த வீரர்களே எடுத்துக் கொண்டுவர உபயோகித்து வந்த ஒரு ‘ஹெலிகாப்ட’ ரைக்கூடச் சீனர்கள் சுட்டுவிட்டனர். ஆனால் அதை ஒட்டிச் சென்ற வீரன் ‘பாரசூட்’ குடையைப் பயன் படுத்திக்கொண்டு வானவெளியில் குதித்து, இந்தியப் படையினர் இருந்த இடத்திற்கு மீண்டு வந்து சேர்ந்து விட்டான்.

சீனர்கள் இந்திய திபேத்து எல்லையாகிய மக்மகான் கோட்டைத் தாண்டி 20 மைலுக்கு அப்பால் வந்து விட்டனர். நாம் கா-சூ நதிக்குத் தெற்கில் கடும்போர் நிகழ்ந்தது. 20-ந் தேதி இரவிலும் 21-ந் தேதி பகலிலும் தொடர்ந்து பல முனைகளில் சண்டை நடந்தது. சீனரிடையே உயிர்ச் சேதம் மிக அதிகமாயிருந்தது.

லடாக்

நமது வடமேற்கு இமாலய எல்லையில் காஷ்மீரைச் சேர்ந்த லடாக் பிரதேசமுள்ளது. இதைப்பற்றி முதல் அதிகாரத்தில் விவரமாகக் கூறப்பட்டுள்ளது. லடாக்கின் வடபகுதியிலுள்ள நம் 16 காவல் நிலையங்களில் 11 நிலையங்களைச் சீனர் 20-ந் தேதி அதிகாலையிலிருந்து ஏக காலத்தில் தாக்கிவந்தனர். அங்கும் இந்தியப் படையினர் எல்லையற்ற வீரத்துடன் போரிட்டனர். 4 நிலையங்கள் வீழ்ந்து விட்டன: 7 நிலையங்களில் தாக்கிய எதிரிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்தியா படையெடுத்ததாம் !

சீனக் கம்யூனிஸ்ட் அரசாங்கம் முன் அறிவிப்பின்றி, போர்ப் பிரகடனம் செய்யாமல், திடீரென்று பெரிய

88