உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

தொல்காப்பியம்-நன்னூல்



குறித்தல் காண்க இதனால் நீண்ட கோடுள்ளதாய்ப் புள்ளி பெறுதலான் அவ்வாயதமே ஆய்தமென்றும் ஆய்தப்புள்ளி என்றும் வழங்கலாயிற்றுப்போலும், பல்லவ சாசனத்துக் கண்ட இவ்வாய்த வடிவைப் போலவே வடமொழி விசர்க்கத்துக்கு மேலும் கீழுமமைந்த இரட்டைப்புள்ளி வடிவேயன்றி (;) என இடைக்கோடு வளைவின்றியும் பின் பாண்டிய சாசனமொன்றில் காணப்படுகிறது ஈண்டு ஒப்பிடத் தக்கதாம். ஆகவே அச்சொல்லின் மூலம் ஆஸ்ரதமாயினுங் ஆய்தமாயினும் அவ்வெழுத்துக்கும் விசர்க்கத்துக்கும் ஒலிவடிவும் வரிவடிவும் ஒன்றாகவே ஆசிரியர் காலத்தில் அமைந்திருந்ததென்பதும், முப்பாற்புள்ளியினதாகிய அது மிகப்பிற்காலத்தேதான் எழுதப் பட்டதென்பதும் மேற்கூறியவற்றினின்றும் பெறப்படும் என அறிஞர் மு. இராகவையங்காரவர்கள் கூறுவர். .

 முதலில் ஆய்தம் முப்பாற் புள்ளியினதாகக் கருதப்பட்டது எக்காலத்தென நோக்குவோம். குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தமென்ற முப்பாற் புள்ளியும் என்ற தொடர்க்கு உரை கூறப் போந்த இளம்பூரணர், ‘குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஆய்தமென்று சொல்லப்பட்ட மூன்று கூற்றதாகிய புள்ளியும் என இவை எனக்கூறி, குற்றியலிகரமும் குற்றியலுகரமும் என்னும் எண்ணும்மை விகாரத்தாற் றொக்கன எனக் குறிப்பும் வரைந்தனர்: மூன்றனுள் முன்னின்ற இரண்டிற்கு எண்ணும்மை விகாரத்தாற் றொக்கன. எனவே ஈற்றதாகிய ஒன்றன்கண் தொகாது நிற்கிற தென்பது கொள்ளப்படும் சூத்திரத்தில் அவ்வாறு உம்மை தொகாது நிற்குமிடம் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் என்பதில் புள்ளியென்பதன் ஈற்றிடமே என்பது விளங்கும். ஆகவே முப்பாற் புள்ளி என்பது ஆய்தமாதல் வேண்டும் ஆய்தமென்ற முப்பாற் புள்ளி யென்பதில் ஆய்தமென்பதன்கண் உம்மை இல்லாதிருக்க, ஆய்தமுமென உரையிற் காணப்படுதல் ஏடெழுதுவோரால் நேர்ந்த பிழை யாதல் வேண்டும். இங்கு முப்பாற்புள்ளியென்றது ஆய்தத்தின் வடிவை உணர்த்தியது என்பது உரையாசிரியர் உரையாலும் குறிப்பாலும் நன்கு தெளியப்படும். இதனைத் தழுவியே நச்சினார்க்கினியரும் உரை கூறினமை முற்கூறப்பட்டது. இகரமும் உகரமும் என உம்மை தொக்கதாகக் கொள்ளாமல் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என அம்மூன்றும் புள்ளிபெறுதல் பற்றிப் பொதுப் பெயராக முப்பாற் புள்ளியும் என்றார் எனச் சிவஞான முனிவர் கூறுவர். அதுகொண்டு,