உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூன்மரபு

47



 ஆசிரியர் தனிமெய் பிறமெய்யோடும் மயங்குநிலையை மெய்ம்மயக்கு எனவும், தனிமெய் தன்மெய்யோடு மயங்கி நிற்கும் நிலையை உடனிலை யெனவும் இச்சூத்திரத்திற் பகுத்துரைத்தல் காணலாம்.
 மொழியிடை நிற்கும் எழுத்துக்களின் மயக்கம் உணர்த்தப் போந்த நன்னூலார், உயிருடன் உயிர்க்கு மயங்குந் தன்மையின்மையின் அதனையொழித்து மெய்யுடன் மெய் மயங்குதலும் உயிரும் மெய்யும் மாறி மயங்கலுமாகிய இவ்விரண்டினையும் இடைநிலை மயக்கத்தில் உணர்த்த எடுத்துக்கொண்டார்.
   க, ச, த, ப, வொழித்த ஈரேழன் கூட்டம் 
   மெய்மயக் குடனிலை ரழவொழித் தீரெட் 
   டாகும் இவ்விருபான் மயக்கும் மொழியிடை 
   மேவும் உயிர்மெய் மயக்கள வின்றே. (நன். 110) 
 (இ-ள்) மெய் பதினெட்டனுள் க, ச, த, ப, என்னும் நான்கும் ஒழித்தொழிந்த பதினான்கு மெய்யும், பிற மெய்களோடு கூடுங்கூட்டம் வேற்றுநிலை மெய்ம் மயக்கமாம். ர ழ என்னும் இரண்டு மொழித்தொழிந்த பதினாறு மெய்யும் தம்மொடு தாம் கூடுங் கூட்டம் உடனிலை மயக்கமாம், இவ்விரண்டு பகுதி மயக்கமும் மொழியிடை வரும். உயிருடன் மெய்யும் மெய்யுடனுயிரும் மாறி உயிரும் மெய்யுமாக மயங்கும் மயக்கத்திற்கு வரையறையில்லை; வேண்டியவாறே மயங்கு மென்பதாம்.
 இதன்கண் பவணந்தியார், உயிரும் மெய்யும், மெய்யும் உயிரும் மாறி 

மயங்கு மயக்கத்திற்கு அளவின்றெனக்கூறி, இடை நிலையாக மெய்களை ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியவாறே மெய்மயக்கு, உடனிலைமயக்கம் என இருவகைப் படுத்துப் பெயர் கூறினார்.

 இச்சூத்திரத்தால் மெய் மயங்குங்காற் க, ச, த, ப, என்னும் நான்கும் தம்மொடு தாமே மயங்குமெனவும், ர, ழ, என்னும் இரண்டும் தம்மோடு பிறவே மயங்குமெனவும், ஒழிந்த பன்னிரண்டும் தம்மொடு தாமும் பிறவும் மயங்குமெனவும் பெற்றாம்.
 இவ்விருவருங் கூறிய மெய்ம்மயக்கத்தினைப் பிற்காலத்து உரையாசிரியர்கள் வேற்றுநிலை மெய்ம்மயக்கமெனவும் உடனிலையினை உடனிலை மெய்மயக்கமெனவும் பெயரிட்டு