162
தொல்காப்பியம்-நன்னூல்
உயிரீறு நின்று வன்கணத்தோடும் சிறுபான்மை ஏனைக் கனத்தோடும் மயங்கிப் புனருமாறு கூறினமையின் உயிர்மயங்கியல் என்னும் பெயர்த்தாயிற்று. மயங்குதல்-கலத்தல். உயிரும் புள்ளியும் இறுதியாகிய உயர்திணைப் பெயர்கள் அல்வழி வேற்றுமையாகிய எல்லாவிடத்தும் இயல்பாமெனவும், ஒரோ வழி அஃறிணை விரவுப்பெயர் இயல்பாவனவுளவெனவும் தொகைமரபில் விதந்து கூறிய ஆசிரியர், அவையொழிந்த உயிரீற்று அஃறினைப் பெயர்களையும், ஏனை வினைமுற்று வினையெச்சம் பெயரெச்சங்களையும் ஈண்டு உணர்த்துவான் எடுத்துக்கொண்டு, அகரமுதல் ஒளகாரம் வரை அவற்றை நெடுங்கணக்கு முறையான் வைத்துணர்த்துகின்றார். இவ்வியலில் 93 சூத்திரங்கள் உள்ளன. அவற்றுட் பல மாட்டேற்று முறையில் அமைந்தனவாகும். ஈற்றுவகையாற் கூறப்பட்ட விதிகளெல்லாம் வல்லெழுத்து மிகுவன, இயல்பாவன, மெல்லெழுத்து மிகுவன, உயிர்மிக வருவன, நீடவருவன, குறுகவருவன, சாரியை பெறுவன, பிறவாறு திரிவன என்னும் இவ்வகைப் பகுப்புக்களுள் அடங்குவனவாம். இவ்வகையால் ஒத்த விதியினவாகிய சூத்திரங்களைத் தொகுத்து நோக்குதல் இன்றியமையாத தாகும். முதன் முதல் அ, இ, உ என்னுஞ் சுட்டின்முன் நாற்கணமும் புணர்தல் ஈண்டு நோக்கத்தக்கதாகும்.
- மூன்று சுட்டின் முன்னும் நாற்கணமும் புணர்தல்:
அ, இ, உ என்னும் சுட்டும் வல்லெழுத்து வருவழி வந்த வல்லெழுத்து மிக்கு முடியுமென்பதனை முறையே இவ்வதிகாரத்து 204, 236, 255-ஆம் சூத்திரங்களிற் கூறுவர் ஆசிரியர். அகரத்தின் முன்னர் ஞ ந ம வென்னும் மெல்லெழுத்துக்களை முதலாகவுடைய மொழிகள் வருமிடத்து வந்த மெல்லொற்று மிக்குமுடிதலும், யகரமும் வகரமும் உயிர் முதன் மொழிகளும் வருமிடத்து வகரவொற்று மிக்கு முடிதலும், செய்யுளுட் சுட்டு நீண்டு முடிதலும் உளவாம். இவ்விதிகளை,
சுட்டின் முன்னர் ஞநமத் தோன்றின்
ஒட்டிய வொற்றிடை மிகுதல் வேண்டும். (தொல். 205)
யவமுன் வரினே வகர மொற்றும். (தொல். 206)
உயிர்முன் வரினும் ஆயியல் திரியாது. (தொல். 207)
நீட வருதல் செய்யுளு ளுரித்தே. (தொல், 208)