உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

குறித்த அப்பொருளோடே தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வந்து வழங்கு மாயின், அவை திசைச்சொற்கள் என்பதனை ஆசிரியர் தொல்காப்பியனார்.

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தினும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி (சொல். சாம் என்ற சூத்திரத்தால் விளக்கினார். இதன்கண் செந்தமிழ் என்பதற்குச் செந்தமிழ் மொழியெனப் பொருள் கொள்ளாது. செந்தமிழ் நாடு எனப்பொருள் கூறினர் உரையாசிரியர். பவனந்தியாரும் அவர் கொள்கையினை ஏற்றுப் பன்னிரு நிலத்தின் வேறாகச் செந்தமிழ்நிலமெனத் தனியே ஒன்றுள்ளதென்று கொண்டு. செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் நிலத்தின் கண்ணும் பதினெண் மொழிகளுள் தமிழொழிந்த ஏனைய மொழிகள் வழங்குகின்ற வேற்று நாட்டினும் உள்ளோர் குறிப்பின்வாய்ச் செந்தமிழோர் குறிப்பினவன்றி அத்திசை களினின்றும் செந்தமிழ் நிலத்துவந்து வழங்குவன திசைச்சொல்லென்பது பட

‘செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும் 
ஒன்பதிற் றிரண்டினிற் றமிமொழி நிலத்தினும் 
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி {273} 
எனச் சூத்திரஞ் செய்துள்ளார்.
 வடவேங்கடம் தென்குமரியிடைப்பட்ட தமிழ் நிலம் அனைத்தையும் தமிழ் கூறும் நல்லுலகம் எனப் பனம்பாரனார் கூறுதலானும், இந்நிலப் பகுதியுள் செந்தமிழ் நிலமெனத் தனியே ஒரு நாடு கொள்ளப்பட்டமை தொல்காப்பியர் காலத்து இன்றாகலானும், இவர்களால் பகுக்கப்பட்ட தென்பாண்டி முதலிய பன்னிரு நாடுகளும் செந்தமிழ் வழக்கினையே மேற்கொண்டன வென்பது.

தென்பாண்டி குட்டங் குடங்கற்க வேண்பூழி பன்றியருவா வதன் வடக்கு - நன்றாய சீத மலாடு புனனாடு செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிருநாட் டெண். - -

என்ற பழைய வெண்பா வொன்றில் கூறிய செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிருநாடு’ என்ற தொடரால் விளங்குதலானும். இப்பாடலினும் செந்தமிழ் சேர் எனக் கூறப்பட்டதன்றிச் செந்தமிழ் நிலஞ்சேர்’ எனக் கூறப்படாமையானும் செந்தமிழ் நாடெனத் தனியே ஒரு நாடிருந்த தென்பதும், அஃதொழிந்த ஏனைய பன்னிரு நாட்டுப் பகுதிகளும் கொடுந்தமிழ் நாடாம் என்பதும் பிற்காலத்தார் தம் பிழையுரையாதல் திண்ணம். அன்றியும் தென்பாண்டி நாடென்பது, தமிழ்நாட்டின் தென்பகுதியிலுள்ளதாய பாண்டிநாடு எனப் பொருள்படுமன்றிப் பாண்டிநாட்டின் தென்பகுதியெனப் பொருள்படாதாம். அங்ஙனம் பொருள்படுமெனின் வடபாண்டி நாடென அந்நாட்டின் வடபகுதி வழங்கப்படுதல் வேண்டுமென்க.

 தொல்காப்பியனார் நூல் செய்தற்கு முன்னர் எழுத்திலக்கணமும் சொல்லிலக்கணமும் மயங்கக்கூறிய நூல்கள் வழங்கிய முறை மாற்றி மக்கள் எழுத்துக்களின் தனித்த இயல்பினையுணர வேண்டி ஆசிரியர் அதனை வேறொரதிகாரமாகக் கூறினாரென்றற்கு எழுத்து முறைகாட்டி என்றார்” என நச்சினார்க்கினியர் பனம்பாரனார் பாயிரத்திற்குச் சிறப்புரை கூறுவர். எனவே தொல்காப்பியனார் எழுத்ததிகாரத்திற் சொல் முதலியவற்றின் இலக்கணங்கள் வந்து மயங்காதபடி எழுத்துக்களின் இயல்பொன்றையுமே கூறிச் செல்கின்றாரென்பது கூர்ந்து நோக்கத்தக்கது.

இனி, தொல்காப்பிய வெழுத்ததிகார விதிகளும், அவற்றோடு ஒற்றுமையுடையனவும் மாறுபட்டனவுமாய நன்னூலெழுத்ததிகார விதிகளும் இயைத்துரைக்கப்படும். இதன்கண் தொல்காப்பியச் சூத்திரங்களெல்லாம் தமிழெண்களாலும், அவற்றின் பின்னரெடுத்துக் காட்டப்படும் நன்னூற் சூத்திரங் களெல்லாம் இக்காலத்துப் பழகும் ஆங்கில எண்களாலும் குறிப்பிடப்படும்.