உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மதிப்புரை
செ. வை. சண்முகம்

பேரா. க(ந்தசாமி) வெள்ளைவாரணன் (1917-88) அவர்கள் எழுதிய தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம் என்ற இலக்கண ஆய்வு நூல் நாலாம் பதிப்பாக (1962, 1970, 1974) இன்று மெய்யப்பன் தமிழ் ஆய்வகத்தின் வெளியீடாக வருவதே அதன் சிறப்பை ஒருவாறு புலப்படுத்தும். அந்த நூலுக்கு இருக்கும் இன்னொரு வரலாற்றுச் சிறப்பும் சுட்டிக்காட்டத் தகுந்தது. அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் வகுப்பில் முதல் வகுப்பில் முதல் மாணவராய் வெற்றி பெற்று அங்கேயே (1935-7) பேரா. சோமசுந்தர பாரதியாரிடம் ஆய்வு மாணவராய்ச் சேர்ந்து செய்த ஆராய்ச்சியின் பயனாய் எழுதப்பட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழக இதழில் (Journal of the Annamalai University) 1941 – முதல் கட்டுரைகளாக வந்தவைகளையே முதலில் 1962-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தனி நூலாக வெளியிட்டது. (பார்க்கவும்: வெள்ளைவாரணன். தொல்காப்பியம் நன்னூல் சொல்லதிகாரம் - பதிப்புரை)

அந்த நூல், அடிப்படையாக ஒரு துறையைச் சார்ந்த இரண்டு நூல்களை ஒப்பிட்டு ஆயும் இலக்கண உள் ஒப்பாய்வு முறையைப் பின்பற்றுகிறது. தொல்காப்பியம். நன்னூல் என்ற இரண்டு இலக்கண நூல்களின் எழுத்திலக்கணச் செய்திகளை ஒப்பிட்டு ‘ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் விளக்குவதாக இந்த நூலின் முன்னுரை கூறுவது ஒரு பகுதி உண்மையே. ஏனென்றால் நூலில் ஆங்காங்கே தொல்காப்பியச் சூத்திரங்கள் நன்னூலாக உருப்பெற்றவிதமும் விளக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இலக்கணக் களஞ்சியம் என்று கருதத் தகுந்த வகையில் தமிழ் எழுத்திலக்கண ஆய்வுத் தொடர்பாக வேறு பல நூல் செய்திகளையும் தொகுத்துத் தருவதோடு இலக்கணக் கருத்துகளின் மதிப்பீடாகவும் பிற ஆசிரியர்கள் கருத்துகளின் மதிப்பீடாகவும் நூலில் பலசெய்திகள் காணப்படுகின்றன. வீரசோழியம், அவிநயம், இலக்கண விளக்கம், சிவஞான முனிவரின் தொல்காப்பியப் பாயிர விருத்தி, முதல் சூத்திர விருத்தி, தொல்காப்பிய உரையாசிரியர்களான இளம்பூரணர், நச்சினார்க்கினியர், நன்னூல் உரையாசிரியர்களான மயிலைநாதர். சங்கரநமச்சிவாயர் ஆகியோர் கருத்துகளும் தற்கால ஆய்வாளர் கருத்துகளும் ஆங்காங்கே எடுத்துக்காட்டப்பட்டு மதிப்பீடும் செய்யப்பட்டுள்ளன. நன்னூலின் பல புதிய கருத்துகளுக்கு