இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
154
தொல்காப்பியம்-நன்னூல்
ஆ எ ஆகும் யாமென் இறுதி ஆவயின் யகரமெய் கெடுதல் வேண்டும் எனை யிரண்டும் நெடுமுதல் குறுகும். (தொல். 188)
இது மகர ஈற்றுள் முற்கூறிய முடிபு ஒவ்வாதன வற்றிற்கு முடிபு கூறுகின்றது.
(இ-ள்) தாம், நாம் என்னும் மகரவீறும், யாம் என்னும் மகாவீறும் நும்மென்னும் மகரவீறு போல அத்தும் இன்னும் பெறாது முடிதலையுடைய. யாமென்னும் மகரவீற்றுச் சொல்லில் ஆகாரம் எகரமாம். அவ்விடத்து யகரமாகிய மெய் கெடுதல் வேண்டும். தாம் நாம் என்னும் இரண்டும் நெடுமுதல் குறுகித் தம் நம் என நிற்கும் எறு.
(உ-ம்) தம்மை, நம்மை, எம்மை எனவரும்.
எல்லாம் என்னும் இறுதி முன்னர் வற்றென் சாரியை முற்றத் தோன்றும் உம்மை நிலையும் இறுதி யான. (தொல்.189) இது மகரவீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுகின்றது.
(இ-ள்) எல்லாம் என்னும் மகரவீற்றுச் சொல் முன்னர் அத்தும் இன்னும் அன்றி வற்றென்சாரியை வந்து முடியும்; ஆண்டு உம்மென்னும் சாரியை இறுதிக்கண் நிலைபெறும் எறு.
எல்லாம் என்பதன் மகரம் வற்றின்மிசை ஒற்றென்று கெடுக்கப்படும். -
(உ-ம்) எல்லாவற்றையும் எல்லாவற்றினும், எல்லாவற்றுக் கண்ணும் எனவரும்.
“முற்ற’ என்றதனால் எல்லாவற்றொடும் என மூன்றாம் உருபின்கண்ணும், எல்லாவற்றுக்கும் என நான்காம் உருபின் கண்ணும், எல்லாவற்றதும் என ஆறாம் உருபின்கண்ணும் முற்று கரத்தின் முன்வரும் உம் என்பதன் உகரக்கேடு கொள்ளப்படும் என்பர் உரையாசிரியர்.
உயர்தினை யாயின் நம்மிடை வருமே. (தொல்.190)
இஃது எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுகின்றது.
(இ-ள்) எல்லாம் என நின்ற மகரவீற்று விரவுப் பெயர் உயர்திணைக்கண் வருமாயின் நம்மென்னும் சாரியை இடைவந்து புணரும் எ-று.