இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
114
தொல்காப்பியம்-நன்னூல்
மொழியியல்பினை நேர்முகமாய் உணர்த்தாமல் மொழிக்கு உறுப்பாகிய எழுத்துக்களின் இலக்கணத்தினைக் கூறுமுகமாக அவ்வெழுத்துக்களாலாகிய மொழியின் நிலைமையையும் உய்த்துணரவைக்கு மியல்பிற்றாதலின் அதுவும் மயங்கா மரபின் எழுத்திலக்கண முணாத்தியதெனவே கொள்ளப்படும்.
நிறுத்த சொல்லும் குறித்துவரு கிளவியும் அடையொடு தோன்றினும் புணர்நிலைக் குரிய (தொல் 110)
இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
(இ-ள்) நிலை மொழியாக நிறுத்தின சொல்லும் அதனைக் குறித்து வருமொழியாக வருஞ் சொல்லும் தாமே புணராது ஒவ்வொரு சொல்லை அடைமொழியாகப் பெற்றுவரினும் புணர்த்தற்குரியவாம் - எறு.
எனவே நிலைமொழி அடையடுத்தும் வருமொழி அடையடுத்தும் அவ்விரு மொழியும் அடையடுத்தும் புணர்தற்குரியன என்பது பெறப்படும். அடைமொழிகளாவன உம்மைத்தொகைப் பொருள்படவும் இருபெயரொட்டுப் பண்புத்தொகைப் பொருள் படவும் நிலைமொழி வருமொழிகளை அடுத்து நிற்கும் சொற்களாம்.
உம். பதினாயிரம் + ஒன்று = பதினாயிரத்தொன்று
(நிலைமொழி அடையடுத்து வந்தது) ஆயிரம் + ஒருபஃது = ஆயிரத்தொருபஃது (வருமொழி அடையடுத்து வந்தது) பதினாயிரம் + இருபஃது = பதினாயிரத்திருபஃது (இருமொழிகளும் அடையடுத்து வந்தன) மருவின் றொகுதி மயங்கியல் மொழியும் உரியவை யுளவே புணர்நிலைச் சுட்டே. (தொல்.111)
இது மரூஉ.மொழிகளும் நிலைமொழி வருமொழிகளாக வைத்துப் புணர்க்கப்படு மென்கிறது.
(இ-ள்) தலைதடுமாறாக மயங்கின இயல்புடைய மரூஉ வழக்கும் புணரும் நிலைமைக்கண் உரியன உள எறு.
ஈண்டு மரூஉவென்றது இலக்கணத்தோடு பொருந்தின மரூஉ.மொழிகளை, நிலையென்றதனால் இலக்கணத்தோடு பொருந்திய மரூஉ வழக்கல்லா மரூஉ வழக்கும் புணர்க்கப் படுமெனக் கொள்க என்பர் இளம்பூரணர்.