உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உருபியல் 149

   (இ-ள்) பன்மைப் பொருளைக் கருதின பெயர்களின் இறுதி அகரம் வற்றுச் சாரியையோடு பொருந்துதலை ஒழிதல் இல்லை

எ_று:.

   (உ-ம்) பலவற்றை, சிலவற்றை, உள்ளவற்றை, இல்லவற்றை எனவரும்.
   ‘எச்சமின்று என்றதனால் ஈண்டும் உருபு இன் சாரியை பெற்றே முடியுமென்றும், இன்னும் இதனானே மேல் இன் பெற்றன. மகத்தை, நிலாத்தை யெனப் பிற சாரியையும் பெறுமென்றும் கொள்வர் இளம்பூரணர்.
   பல்லவை துதலியவற்றின்கண் மூன்றாமுருபு சிலவற்றோடு என வற்றுப்பெற்றே முடியுமென்பர் நச்சினார்க்கினியர்.
     யாவென் வினாவும் ஆயியல் திரியாது. (தொல்.175)

இதுவுமது.

   (இ-ள்) யாவென்று சொல்லப்படும் ஆகாரவீற்று வினாப் பெயரும் உருபொடு புணருங்கால் முற்கூறிய முறையில் திரியாது வற்றுச்சாரியை பெறும் எ_று.
  (உ-ம்) யாவற்றை, யாவற்றொடு எனவரும். 
     
     சுட்டு முதலுகரம் அன்னொடு சிவணி
     ஒட்டிய மெய்யொழித் துகரங் கெடுமே. (தொல். 178)

இதுவுமது.

   (இ-ள்) சுட்டெழுத்தினை முதலாக உடைய உகர வீற்றுச் சொல் அன்சாரியையோடு பொருந்தித் தான் பொருந்திய மெய்யை நிறுத்தி உகரம் கெடும் எறு.
   (உ-ம்) அதனை, இதனை, உதனை என வரும்.
     சுட்டுமுத லாகிய ஐயென் இறுதி 
     வற்றொடு சிவணி நிற்றலும் உரித்தே. (தொல். 177) 

   இஃது ஐகார வீற்றுள் சிலவற்றுக்கு முடிபு கூறுகின்றது. 
  
  (இ-ள்) சுட்டெழுத்தினை முதலாகவுடைய ஐகார வீற்றுச் சொல் வற்றுச் சாரியையொடு பொருந்தி நிற்றலு முரித்து எறு. 
  
  (உ-ம்) அவையற்றை, இவையற்றை, உவையற்றை என வரும். இங்ஙனம் ஐகாரம் நிற்க வற்று வந்துழி வற்றின் வகாரம் கெட்டு முடிதல் வஃகான் மெய்கெட’ (122) என்பதனால் கூறப்பட்டது.