இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14
தொல்காப்பியம்-நன்னூல்
மயங்காதபடி, இயற்றமிழை வேறுபிரித்து முறைப்பட அறிவித்து, கடல் சூழ்ந்த நிலவெல்லையிலே ஐந்திர வியாகரணத்தை முற்றவுணர்ந்த தொல்காப்பியன் எனத் தன் பெயரைத் தோற்றுவித்தலால் பல புகழையும் இவ்வுலகத்தில் நிலைபெறுத்தின தவவொழுக்கத்தினையுடையான் என்றவாறு.
“வடவேங்கடந் தென்குமரி எனவே எல்லையும், வழக்குஞ் செய்யுளும் ஆயிருமுதலின், எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி எனவே துதலிய பொருளும் பயனும், முந்துநூல் கண்டு’ எனவே வழியும் முறைப்பட எண்ணி எனவே காரணமும், ‘பாண்டியன் அவையத்து எனவே காலமும் களனும், அதங் கோட்டாசாற்கு அரில்தபத் தெரிந்து எனவே கேட்டோரும், ‘தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி’ எனவே ஆக்கியோன் பெயரும் நூற் பெயரும், புலம் தொகுத்தோன் எனவே நூலமைப்பாகிய யாப்பும் பெறப்பட்டன.
இப்பாயிரம், தொல்காப்பியம் என்னும் ஒரு நூலுக்குரிய வரலாறாதலின், சிறப்புப்பாயிரம் ஆயிற்று. புலம்-இலக்கணம். போக்கு-குற்றம், பனுவல்-நூல். கரைதல்-சொல்லுதல். அதங்கோடு-ஊர்ப்பெயர். அரில்-குற்றம். தப-கெட. ஐந்திரம் இந்திரனாற் செய்யப்பட்ட வடமொழியிலக்கணநூல்; பாணி னீயத்திற்கு முற்பட்ட பழமையுடையது. படிமை - தவ வொழுக்கம்,