இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
42
தொல்காப்பியம்-நன்னூல்
என்ற வடிவும் வரிவடிவில் வழங்கப்பட்டன என்பதும், அவற்றுள் குறிலிது நெடிலிது என்ற வேறுபாடு உணர்தற்குக் குற்றெழுத்தைக் குறிக்குமிடத்து அவ்விரண்டன்மேலும் புள்ளி யிட்டெழுதினார்களென்பதும் இவ்விதியாற் புலனாம். இவ்வாறு புள்ளியிடுதல் எகர ஒகரங்களுக்கேயன்றி மெய்யூர்ந்த எகர ஒகரங்களுக்கும் உண்டென்பது தந்திவர்மன் ஆட்சியில் 4-ம் ஆண்டில் (கி.பி 800-840) திருவெள்ளறைக்கிணறொன்றில் வெட்டப்பட்ட சாசனத்து “நான் காவதெடுத்து” பெருங்கிணறு, செய்து என்ற சொற்களின் மெய்யூர்ந்த எகரங்கள் புள்ளியிட் டெழுதப் பெற்றிருத்தலால் அறியப்படும்.
மேலையிரண்டு சூத்திரங்களிலேயும் குறிக்கப்பட்ட மெய்களும் எகர ஒகரமும் புள்ளி பெறுதலாகிய விதியை, எழுத்துக்களின் உருவம் என்ற பகுதியில்,
தொல்லை வடிவின வெல்லா வெழுத்துமாண் டெய்து மெகர ஒகர மெய்புள்ளி. (நன். 98)
என்ற சூத்திரத்தாற் கூறிப்போந்தார் நன்னூலார்.
எகரமும் ஒகரமும் புள்ளி பெறுதலைப் பின்வரும் மாத்திரைச் சுருக்க அணியமைந்த செய்யுட்களாலும் நன்கறியலாம்.
“நேரிழையார் கூந்தலினோர் புள்ளிபெற நீண்மரமாம் நீர்நிலையோர் புள்ளி பெறநெருப்பாம்” ‘மயிர்நிறுவி மற்றதற்கோர் புள்ளி கொடுப்பின் செயிர்தீர்மரமாகும் சென்று” நன் சூ. 268 மேற்.
இதன்கண் நேரிழையார் கூந்தல், மயிர் என்பன ஒதி என்று கொள்ளப்படும். அதன்கண் ஒதி எனப் புள்ளி கொடுத்தால் ஒதி என்ற மரத்தைக் குறிக்கும். அவ்வாறே நீர் நிலையென்பது ஏரி, அதன் ஏகாரத்துப் புள்ளியிட்டால் எரி என நெருப்பை யுணர்த்தும்.
எழுத்தினது உருவத்தைக் குறிக்கவந்த நன்னூலார், மகரக் குறுக்கம், குற்றியலுகரம், இவை புள்ளி பெறுமென்று தொல்லாசிரியர் கூறிய வரிவடிவை இறந்தது விலக்கல் என்னும், உத்தியால் கூறாது விலக்கினார் போலும்.
இக்காலத்து எகர ஒகரம் என்பன, மகரக்குறுக்கம் குற்றியலுகரம் என்பனபோலப் புள்ளி பெறுதலை யொழிந்தன. எகர ஒகரங்களோடு ஏகார ஓகாரங்கட்கு வரிவடிவு வேற்றுமை