88
தொல்காப்பியம்-நன்னூல்
சான்றோர் மகரத்தோடு மயங்காத னகரவிற்று அஃறிணைச் சொற்கள் ஒன்பதென வரையறை செய்தனர். மயங்காது என்னும் வரையறை னகரத்தின் மேற் செல்லும் என்பர் நச்சினார்க்கினியர்.
எகின், செகின், விழன், பயின், அழன், புழன், குயின், கடான், வயான் எனவரும் இவ்வொன்பதும் மகரத் தொடர் மொழியுடன மயங்காது இயல்பாகவேயமைந்த னகரவீற்றுச் சொற்களாம். இவ்வொன்பதும் மயங்கா எனவே மகரத்தோடு னகரம் மயங்கிய சொற்களும் உளவென்பது பெற்றாம். நிலம்-நிலன், கலம்-கலன், என்றாற்போல்வன மகரத்தொடு னகரம் மயங்குவன. இம்மொழியிறுதிப் போலியினை,
மகர விறுதி யஃறிணைப் பெயரின்
னகரமோ டுறழா நடப்பன வளவே. (நன். 122)
என வருஞ் சூத்திரத்தாற் பவணந்தியார் குறிப்பிடுவர். அஃறிணைப் பெயர்களின் இறுதி மகரமானது னகரத்தோடு ஒத்து நடக்குஞ் சொற்களுஞ் சிலவுளவாம் என்பது மேற்குறித்த நன்னூற் சூத்திரத்தின் பொருளாகும். மகரம் னகரத்தோடு ஒத்தலாவது மகரம் நின்ற இடத்தில் னகரம் வந்து நிற்பினும் பொருள் வேறுபடாதிருத்தல். ஒத்து நடப்பன சிலவுள. எனவே அவ்வாறு உறழாது வருவனவே பெரும்பாலன எனக் கொள்க. வட்டம், குட்டம், மாடம், கூடம் என்றாற்போலும் மகரவீற்று அஃறிணைப் பெயர்ச் சொற்கள் னகரத்தோடு மயங்காமை யுணர்க.
அகர முதல் னகர விறுதியாகவுள்ள முதலெழுத்துக்கள் முப்பதையும் நூன்மரபிலும், குற்றியலிகரம் குற்றியலுகரம், ஆய்தம் என்னும் சார்பெழுத்து மூன்றினையும் மொழிமரபிலும் வைத்துணர்த்திய ஆசிரியர், அம்முப்பத்து மூன்றெழுத்துக்களின் பிறப்பு முறையினை இவ்வியலான் உணர்த்துகின்றார். அதனால் இவ்வோத்துப் பிறப்பியலென்னும் பெயர்த்தாயிற்று.
உந்தி முதலா முந்துவளி தோன்றித்
தலையினு மிடற்றினு நெஞ்சினு நிலைஇப்
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்
உறுப்புற் றமைய நெறிப்பட நாடி