உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

தொல்காப்பியம்-நன்னூல்


     நீட வருதல் செய்யுளு ளுரித்தே.      (தொல். 208) 
   என்பதனால் உணரலாம். இறுதி நீண்டு புணர்வன உரைப் பொருட்கண் வரும் அம்ம என்னும் இடைச் சொல்லும், செய்யுள் கண்ணிய தொடர்மொழிக்கண் வரும் அகரவீற்றுப் பன்மைப் பொருளுணர்த்தும் பல சில என்பனவும், உகர வீற்றில் ழகர மெய்யை பூர்ந்த உகர விறுதியும் ஆம். இவற்றை,
     உரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார்.       (தோல்.242) 
    
    பலவற் நிறுதி. நீடுமொழி யுனவே - 
    செய்யுள் கண்ணிய தொடர்மொழி யான. (தொல்,213) 
     ழகர வுகர நீடிட னுடைத்தே
     உகரம் வருத லாவயி னான. (தொல்.261)

எனவரும் சூத்திரங்களால் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

   (உ-ம் ஆயிருதினையி னிசைக்குமன சொல்லே எனவும், அம்மா கொற்றா, சாத்தா, தேவா, பூதா எனவும், பலாஅஞ் சிலாஅ மென்மனார் புலவர் எனவும், பழுஉப் பல்லன்ன பருவுகிர்ப் பாவடி,எனவும் வரும்.

6. குறுகவருவன

   ஆன் என்பதன் முன்னர் வருமொழியாக வரும் பகர வீகாரம் தன்னொற்று மிகத்தோன்றிக் குறுகும். இதனை,
     ஆன்முன் வரூஉம் ஈகார பகாரம் 
     தான்மிகத் தோன்றிக் குறுகலு முரித்தே. (தொல்.233) 

என்பதனாற் கூறினார் ஆசிரியர். -

   (உ-ம்) ‘ஆப்பி நீரோடு அலகுகைக் கொண்டிலர்” (திருக்குறுந்தொகை எனவரும். இக்குறுக்கத்தினை,
     ஆமுன் பகரவி யனைத்தும்வரக் குறுகும் 
     மேலன அல்வழி யியல்பா கும்மே.       (நன்.177) 

என்ற சூத்திரத்தாற் குறித்தார் நன்னூலார்.

   குற்றெழுத்தின் பின்னின்ற ஆகார ஈற்றுச் சொற்களில் ஆகாரத்தினது சினையாகிய ஒரு மாத்திரை கெட்டுக் குறுகிநிற்க ஆண்டு உகரம் வருதல் செய்யுளிடத்து உரியதாகும். இதனை,
     குறியத னிறுதிச் சினைகெட வுகரம் 
     அறிய வருதல் செய்யுளு ளுரித்தே. (தொல்.234)

என்பதனாற் கூறினார் தொல்காப்பியனார்.