உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

தொல்காப்பியம்-நன்னூல்


தன்மை திரிந்து எழுத்தாந்தன்மையடையுமென்பார் வளி யென்னாது வளியிசையென்றார்.

அந்தணர் மறையிற் கூறுமாறு புறத்தெழுந்திசைக்கும் எழுத்துக்களுக்கு முதற்காரணமாகிய அகத்தெழுவளியிசைக்கு மாத்திரை கூறின், அதன் அளவு எல்லார்க்கும் ஒருதன்மைத்தாக விளங்காதெனக்கருதிய தொல்காப்பியனார், புறத்தெழுந் திசைக்கும் எழுத்துக்களாகிய மெய்தெரிவளியிசைக்கே தாம் அளவு கூறிய முறைமையினை இச்சூத்திரத்தால் தெளிவாக அறிவுறுத்துகின்றார். -

உந்தியிலெழுந்த காற்றினைக் கூறுபடுத்தி மாத்திரை கூட்டிக்கோடனும் மூலாதாரம் முதலாகக் காற்றெழுமாறு கூறலும் அந்தணர் மறைக்கு உண்டெனக் கூறிய இவ்வாசிரியர், அம்மதம் பற்றி அவர் பெறுவதோர் பயன் இன்றென இச்சூத்திரத்தால் உய்த்துணரவைத்தலின் இச்சூத்திரம் பிறன் கோட் கூறலென்னும் உத்திக்கு இனம் என்றார் நச்சினார்க்கினியர்.

மெய்தெரி வளியெனவே பொருள் தெரியா முற்கும் வீளையும் எழுத்தாகா என்பது புலனாம். ஆகவே சொல்லப் பிறந்து சொற்குறுப்பாம் ஒசையையே இவ்வாசிரியர் எழுத்தெனக் கொண்டார் என்பது பெறப்படும்

நிலையும் வளியும் முயற்சியு மூன்றும்
இயல நடப்பது எழுத்தெனப் படுமே,

என நச்சினார்க்கினியருரையில் மேற்கோளாக எடுத்துக் காட்டப்படும் பழஞ்சூத்திரம் தொல்லாசிரியர் கூறிய எழுத்தின் இயல்பினை நன்கு விளக்குவதாகும்.

4. புணரியல்

மொழிகள் புணர்தற்குரிய கருவியின் இயல்புணர்த்தின மையின் இது புணரியலென்னும் பெயர்த்தாயிற்று. மேற்கூறப்படும் புணர்மொழிச் செய்கைகளுக்கு இன்றியமையாத சிறப்புக் கருவிகள் இதன்கண் கூறப்படுகின்றன.

மூன்று தலையிட்ட முப்பதிற் றெழுத்தின்
இரண்டு தலையிட்ட முதலா கிருபஃ
தறுநான் கீறொடு நெறிநின் றியலும்