உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

தொல்காப்பியம்-நன்னூல்



யென்னும் மூன்றிடத்துங் குறுகுமெனவும் ஒளகாரம் முதற்கண் குறுகுமெனவுங் கூறினார். இக்கருத்தேபற்றி நன்னூலாரும்,

     தற்கட் டளபொழி ஜம்மூ வழியும் 
     நையும், ஒளவும் முதலற் றாகும்.     (நன். 95)

எனச் சூத்திரஞ் செய்தார். இக்கூற்றினை மறுக்கப்போந்த சிவஞான முனிவர் “இடையன், மடையன், பனை, மனையென் புழிக் குறுகுதல்போல, வைகலும் வைகல் வரக் கண்டும்” என்புழி ஐகாரம் முதற்கட் குறுகாமை செவிகருவியாகப் புலப்படு மாதலானும், அன்றியும் வைகலும் வைகல் என்புழிக் குறுகுமாயின், வைகல் என்பதனைக் ) 6 r யொற்றென்றிசைத்தல் வேண்டும்; வேண்டவே வெண்டளை சிதைதலானும், “மொழிப்படுத் திசைப்பினும் தெரிந்து வேறிசைப்பினும் எழுத்தியல் திரியா என்மனார் புலவர்” என எல்லா எழுத்திற்கும் பொதுப்படக் கூறிய விதியோடு முரணி, ஐகாரம் தெரிந்து வேறிசைத்தற்கண் திரியாதெனவும் மொழிப்படுத் திசைப்பின் யாண்டு வரினுந் திரியுமெனவும் பொருள்கூறுதல் பொருந்தாமையானும், ஒரளபாகும் இடனு மாருண்டே’ என்றவும்மையான், ஒரளடாகா இடனு முண்டென்பது தானே பெறப்படுதலானும், ஈண்டு இடமாவது மொழிமுதல் இடை கடை என மூன்றேயன்றி வேறின்மை யானும், ஐகாரம் மொழி முதலிற் குறுகாதெனவே கொள்க. கண்டுக்காட்டிய ஏதுக்களானும் ஆசிரியர் ஒதாமையானும் பிறரும் “குறுகிய மூவுயிர்” என்றே மொழிதலானும் ஒளகாரக் குறுக்கமென வொன்றின்மை உணர்க; இஃது உரையாசிரியருரை யானும் அறிக” எனக் கூறுமாற்றான் நச்சினார்க்கினியர் முதலியோர் கொள்கையை மறுத்து உரையாசிரியர் உரையைத் தழுவிக்கூறினமை ஈண்டு ஒப்புநோக்கி உணரத்தக்கது. எனவே ஒளகாரக் குறுக்கம் என ஒன்று இன்றென்பதும், ஐகாரம் மொழிமுதலிற் குறுகாதென்பதும் ஆசிரியர் கருத்தாதல் விளங்கும்.

     இகர யகரம் இறுதி விரவும். (தொல். 58) 
   இதுவும் போலி கூறுகின்றது.
  (இ-ள்) இகரமும் யகர மெய்யும் ஒரு மொழியின் இறுதிக் கண் ஒசை விரவிவரும்.