இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
226
தொல்காப்பியம்-நன்னூல்
யாதென் இறுதியுஞ் கட்டு முதலாகிய ஆய்த இறுதியும் உருபியல் நிலையும். (தொல்,422,)
இஃது ஈரெழுத்தொருமொழிக் குற்றியலுகரத்துள் ஒன்றற்கும் சுட்டு முதலாகிய ஆய்தத் தொடர்மொழிக்குற்றிய லுகரத்திற்கும் வேறு முடிபு கூறுகின்றது.
(இ-ள்) யாதென்னும் ஈரெழுத் தொருமொழிக் குற்றுகர ஈறும் சுட்டெழுத்தினை முதலாகவுடைய அஃது, இஃது, உஃது என்னும் ஆய்தத் தொடர்மொழிக் குற்றுகர வீறும் உருபு புணர்ச்சியினியல்பிலே நின்று அன்சாரியை பெற்றுச் சுட்டு முதலிறுதி ஆய்தம் கெட்டு முடியும் எ-று.
(உ-ம்) யாது+கோடு = யாதன்கோடு: அஃது+கோடு அதன் கோடு, இஃது+கோடு = இதன் கோடு, உஃது+கோடு உதன்கோடு, செவி, தலை, புறம் எனவரும். அஃது, இஃது, உஃது எனவரும் ஆய்தத் தொடர் மொழிகளில் ஆய்தங்கெடின் முற்றுகரமாதலின் ஆய்தத்தைக் கெடுத்தற்கு முன் அன்சாரியை யின் அகரத்தைக் குற்றுகரத்தின் மேல் ஏற்றிச் செய்கை செய்தல் வேண்டுமென்பர் நச்சினார்க்கினியர்.
முன்உயிர் வருமிடத் தாய்தப் புள்ளி மன்னல் வேண்டும் அல்வழி யான. (தொல்.423)
இது முற்கூறியவற்றுட் சுட்டுமுதலுகரத்திற்கு ஒருவழி அல்வழி முடிபு கூறுகின்றது.
(இ-ள்) சுட்டு முதலாகிய ஆய்தத் தொடர்மொழிக் குற்றுகரவீற்றின் முன்னே அல்வழிக்கண் உயிர் முதன்மொழி வருமிடத்து ஆய்தப்புள்ளி முன்போலக் கெடாது நிலைபெற்று முடிதல் வேண்டும் எ-று.
(உ-ம்) அஃதாடை, இஃதிலை, உஃதுரல் எனவரும்.
‘முன் என்றதனால் வேற்றுமைக்கண்ணும் ஆய்தங் கெடாமை கொள்க என்பர் உரையாசிரியர்.
(உ-ம்) அஃதடைந்தான் எனவரும்
ஏனைமுன் வளினே தானிலை யின்றே. (தொல். 424)
இது மேலவற்றிற்குப் பிறகணத்தோடு அல்வழி முடிபு கூறுகின்றது.
(இ-ள்) முற்கூறிய ஈறுகளின் முன்னர் உயிர்க்கணமல்லன. வருமாயின் அவ்வாய்தம் கெட்டு முடியும். எ-று