37
இயற்கையின் வேகத்தில் காடுகள் அழிகின்றன. அவை மண்ணோடு மண்ணாகக் கலந்து மக்கிப் போகின்றன. பின்னர் அதே இடத்தில் புதிய காடுகளை-மரம், செடி, கொடிகளைஇயற்கை சிருஷ்டிக்கிறது.
லட்சக் கணக்கான ஆண்டுகளில் தொடர்ந்து இப்படிப் பூமியின் ஆழத்திற்குச் சென்று இடம் பெற்று விட்ட தாவரங்கள், நிலத்தினுள் புதைந்து சிதைகின்றன. அங்கே அவை பற்பல ரசாயன மாறுதல்களுக்கு இலக்காகி, நிலக்கரியாக உருமாறுகின்றன.
இந்த மாற்றங்கள் உடனுக்குடன் ஏற்படக் கூடியவை அல்ல. படிப்படியாக பல மாறுதல்கள் நிகழ்கின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மரங்கள் மண்ணில் அழுந்திக் கிடப்பதால், அவை கருமை நிறம் அடைந்து கெட்டித் தன்மை பெற்று நிலக்கரியாகிறது.
நிலக்கரி ஒர் எரிபொருள் என்பதை முதன் முதலாக கண்டுபிடித்தது யார் என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முன்னரே கிரேக்கர்கள் நிலக்கரியைப் பயன்படுத்தி வந்தனராம். அவர்கள் அப்போது அதற்கு இட்டப் பெயர் "எரியும் கல்" என்பதாகும்.