உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 நன்னெறி மணி

உள்ளங் கொதித்துக் கிளம்புகின்ற கோபத்தை அடக்கும் குணமே குணங்கள் எல்லாவற்றிலும் சிறந்த குணமாகும். மக்களின் செயலும் அத்தகையதே. வெள்ளத்தை அணை கட்டித் தடுத்து நிறுத்துவது அரிதா? உள்ள கரையைப் பெயர்த்து விடுவது அரிதா? என்பதை எண்ணிப் பார்ப்பது நல்லது. (76)

உண்மையை உணரமுடியாமற் செய்கின்ற ஐம்புலன்களும், அறிவற்ற மக்களை ஆட்டிவைக்குமேயன்றி அறிவுடைய மக்களை ஒன்றும் செய்வதில்லை. சூறாவளிக் காற்றாக இருந்தாலும், அது சிறு துரும்புகளைச் சுழற்று மேயன்றிக் கற்றூண்களைச் சுழற்ற முடிவதில்லை. (77)

எத்தனையோ ஓட்டைகள் உள்ள உடம்பிலிருந்து உயிர் ஓடிவிடுவது வியப்பன்று. ஓடாமல் பல ஆண்டுகள் தங்கியிருப்பதுதான் வியப்பு ஓட்டையுள்ள குடத்திலிருக்கும் நீர் ஓடிவிடுவதில் என்ன வியப்பு! ஓடாமல் இருப்பதுதான் வியப்பு! (78)

அன்பு கனியும் உள்ளத்தைப் பெறாத மக்கள், சிறந்த இடம், நிறைந்த பொருள், மிகுந்த ஆட்கள், உயர்ந்த வாகனம் ஆகியவைகளைப் பெற்றிருந்தாலும், அவைகளால் அவருக்கு என்ன பயன்? மொழியிலார்க்கு முதுநூலும், விழியிலார்க்கு விளக்கும் என்ன பயனைத் தரப்போகின்றன! (79)

கல்வியிற் சிறந்த பெரியோர் தமது உயர்வைத் தாமே மதித்துக் கொள்வதில்லை; தம்மிலும் தாழ்ந்தவரிடமும் சென்று அவரது துன்பத்தைப் போக்கி வருவர். பரந்து விரிந்த கடலிலுள்ள நீரானது, மிகச்சிறிய உப்பங்கழிகளிலும் சென்று தங்கியிருந்து உதவிவருகிறது. (80)