உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கடற்கரையினிலே.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

கடற்கரையிலே


தொடங்கினர். அன்னார் ஆக்கிய நற்பணியின் அழகுதான் என்னே ! 'இதோ, ஒன்றையொன்று அடுத்து, அடுக்கடுக்காக உயர்ந்து நிற்கும் ஐந்து திருக்கோயில்களும் தமிழ்நாட்டுச் சிற்பக்கலையின் சீர்மைக்கு அழியாத சான்றாகுமல்லவா? இவற்றின் மருங்கேயுள்ள குகைக் கோயிலின் சிற்பத் திறனைத்தான் என்னென்று சொல்வேன்? இங்கு "ஏனத்தின் உருவாகி எம்பெருமான் காட்சி தருகின்றான். ஏன வடிவத்தில் அமைந்த எம் இறைவனது ஞானஒளியைக் கண்டோர், இவ்வூனப் பிறவியை அறுத்து அந்தமில் இன்பமடைவரல்லரோ? ஏனக் கோயிலை அடுத்து அமைந்துள்ளது ஈசன் கோயில். அங்குள்ள கல்லோவியத்தின் செம்மையைச் சொல்லவுங் கூடுமோ? போர்க்கோலம் கொண்ட பராசக்தி, சங்கு சக்கரம் ஏந்தி, சிங்கத்தின்மீதமர்ந்து எருமைத் தலையுடைய அசுரன் ஒருவனைத் தாக்கும் தன்மையில் அமைந்த அவ்வடிவம் என் உள்ளத்தை அள்ளுகின்றதே ! இம்மட்டே ! மாயக்கண்ணன் - மணிவண்ணன் - கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்துக் கோகுலத்தைக் காத்த கருணை அடுத்த பாறையில் வடிக்கப் பெற்றுள்ளது. 'கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்திக் காத்தனை, எம்பெருமானைக் கண்டுகொண்டேன்' அக்கல்லோவியத்தில் ! கண்ணன் கருணையால் கவலை நீத்த கோகுலத்தில் ஆயர் குழலூதும் அழகும், கன்றினிடம் அன்புடைய கறவைப்பசு மனமுவந்து இடையர்க்குப் பால்



★ ஏனம் = வராகம்.

"ஏனத்தின் உருவாகிய நிலமங்கை எழில்கொண்டான்
  ஞானத்தின் ஒளியுருவை நினைவார்என் நாயகரே"


- திருமங்கை மன்னன் திருப்பாசுரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/38&oldid=1248484" இலிருந்து மீள்விக்கப்பட்டது