46
கடற்கரையிலே
மதத்தார் இந்நகரிலே கலந்து வாழ்கின்றார்கள். சைவம், வைணவம், சமணம், சாக்கியம் ஆகிய நால்வகைச் சமயங்களும் நேசப்பான்மையுடன் இந்நகரில் நிலவக் காண்கின்றேன். கடார தேசத்தை ஆளும் அரசன் சாக்கிய சமயத்தைச் சார்ந்தவன். அந்நாட்டார் பலர், இந்நகரில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வழிபாடு செய்வதற்காகப் புத்த விகாரம் ஒன்று இந்நகரிலே கட்ட விரும்பினான் கடார மன்னன்; என் தந்தையாரிடம் அதற்கு அனுமதி வேண்டினான். உடனே அனுமதி கொடுத்தார் அவர்; அம்மட்டில் அமையாது ஆனைமங்கலம் என்ற ஊரையும் அக்கோயிலுக்கு நன்கொடையாக அளித்தார். சூடாமணி விகாரம் என்னும் பெயரால் இந்நகரத்திலே அந்த ஆலயம் சிறந்து விளங்குவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
"வணிகர் நிறைந்த மணிநகரே ! கடார தேசத்திற்கும், தமிழ் நாட்டிற்கும் நினைப்புக்கு எட்டாத நெடுங்காலமாக வர்த்தக உறவுண்டு. 'காழகம் என்று முன்னாளில் அழைக்கப்பட்ட அந்நாட்டின் விளைபொருளும் நுகர்பொருளும் தமிழ்நாட்டுத் துறைமுகத்தில் வந்து இறங்கிய வண்ணமாயிருந்தன. காழக நாட்டார் காவிரித்துறைமுகத்தில் குடியேறியவாறே திரைகடலோடிய தமிழகத்தார் காழகம், சாவகம் முதலிய நாடுகளில் வாணிகத்திற்காகச் சென்று வாழ்ந்தார்கள். அங்குள்ள தக்கோலம், மலையூர், பண்ணை ஆகிய ஊர்ப் பெயர்கள் தமிழர் இட்ட பெயர்கள் என்பதில் தடையுமுண்டோ?
1. "ஈழத் துணவும் காழகத் தாக்கமும்”
- பட்டினப்பாலை.