படிப்பது ஆங்கிலம்; பார்க்குமிடமெல்லாம் ஆங்கிலம், ஆங்கிலம்தான்! அரங்கில் தெலுங்கிசை, ஆட்சியில் தமிழில்லை. வணிக நிலையங்கள், நீதி மன்றங்கள் எல்லாம் அந்நிய மொழியின் பிடியில். 'எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்பது வெறும் முழக்கமாகி விட்டது. தமிழ்க் குழந்தைகளின் பேச்சில் கூடத் தமிழில்லை. தமிழ் படிக்காமலே பட்டதாரி ஆகிவிடும் கல்வி வாய்ப்புகள் தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளன.
இந்த இழிநிலை வந்துவிடக்கூடாது என்றுதான் பாரதி அன்றே பாடினான்.
'......
கொன்றிடல் போலொரு வார்த்தை – இங்குக்
கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்.”
'புத்தம் புதிய கலைகள் – பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே – அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை!’
'சொல்லவும் கூடுவதில்லை – அவை
சொல்லும் திறமை தமிழ்மொழிக் கில்லை!
மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்!"
'என்றந்தப்பேதை உரைத்தான் – ஆ
இந்த வசைஎனக் கெய்திட லாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்.
என்று தமிழ்த்தாய் தன் மைந்தர்களைப் பார்த்துச் சொன்னதாகப் பாரதிப் பாடினான். மெல்லத் தமிழினிச் சாகும்’ என்று. சொன்னவன், ஒரு முட்டாள்; சொல்லத்தகாதவன் சொன்னான் அவன் சொல் கொன்றிடல் போலொரு வார்த்தை என்றெல்லாம் பாரதி சொல்லியிருந்தும், அவற்றையெல்லாம் விட்டு விட்டு, மொட்டையாகப் பாரதி சொன்னான், பாரதி சொன்னான் என்று பேசினால் அது பாரதிக்குப் பெருமையாகுமா? பாரதிக்குச் சிறுமை செய்வதாகாதா? பேதையின் உரையை மேதையர் மேடையில் இவ்வாறு பேசிடலாமா?
42 • இலக்கியப்பீடம் – அக்டோபர் 2005