பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்போராட்டங்கள் வர்க்கப் போராட்டங்கள். இன்று நடைபெறும் உழவர் தொழிலாளிகளின் அறப்போர்களின் முன்னோடிகள். வரலாற்றை இயக்கும் தலைமையான சக்தியான சக்தி அவை. அவற்றுள் சிலவற்றைச் சுட்டிக் காட்டுவதும், அப்போர்களின் முறைகளை எடுத்துக் காட்டுவதுமே இக்கட்டுரையின் நோக்கம்.

தற்காலத்தில் அநீதிகளை எதிர்த்து உண்ணாவிரதம் ஒரு போர் முறையாகக் கையாளப்படுகிறது. இது உயிரைப் பணயம் வைத்து மக்களை அநீதிகளுக்கு எதிராகத் திரட்டும் முயற்சி. இது போலவே உயிரைப் பணயம் வைத்து அரசனது அநீதிகளை எதிர்த்து மக்கள் உணர்வைத் திரட்டிய நிகழ்ச்சிகளைப் பற்றி அபூர்வமாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

தஞ்சாவூரில் புஞ்சை என்ற கிராமத்தில் ஓர் கல்வெட்டு அகப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-அக்கோயிலில் பணியாட்கள் சிலர் இருந்தனர். அவர்களுக்கு ஜீவிதமாக அளிக்கப்பட்ட நிலத்தை ஊர்ச் சபையார் கைக்கொண்டு வேலையாட்களை வெளியேற்றினர். அவர்கள் அதிகாரியிடம் முறையிட்டுப் பார்த்தனர். பயனில்லை. அவ்வநீதியை எதிர்க்க அவர்கள் கோயில் முன் தீ வளர்த்துத் தீயிலிறங்கி உயிர்த்தியாகம் செய்து கொண்டனர்.

இதேபோலத் தங்கள் உரிமையை நிலைநாட்ட, உழைக்கும் மக்கள் வீரமாக உயிர் நீத்த செய்திகள் அபூர்வமாகக் கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகின்றன. தங்களுடைய உரிமைக்கு மக்கள் ஆதரவைத் திரட்டவும், மன்னனது கவனத்தை ஈர்க்கவும், சிலர் ஊர்க் கோபுரத்தின் மேலேறி கீழே விழுந்து உயிர் நீத்த செய்திகள் சில கோயில் சாசனங்களிலிருந்து தெரிய வருகின்றன.

கோயில்களில் ஆடல் பாடல் நிகழ்த்தவும், பணி செய்யவும், தேவரடியார்கள் இருந்தனர். அவர்களில் இரு வகையினர் உண்டு. அரச குடும்பம், வணிகர் குடும்பம், அதிகாரிகள் குடும்பம் ஆகியவற்றைச் சேர்ந்த பெண்கள் பெருஞ்செல்வத்தோடு கோயில் பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். இவர்கள் பெயரிலிருந்து இவர்களது சமூக

24