உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்களின் உயர்வுக்கு வழிகாட்ட உதாரணமாகத் திகழ்ந்தார்கள் என்று தெரிகிறது. அவர்களுக்குக் கீழ்நிலையிலிருந்த பிறர் அவாகளைப பின்பற்றி அவாகளுடைய நிலைக்கு உயர முயன்றார்கள். எனவே இந்தியாவிலுள்ள பெருவாரியான மக்களின் சமூகம் உயர்வதற்கு பிராமணர்கள் முக்கிய காரணமாக இருந்தார்கள். தமிழ் இலக்கியத்தில் புகழ்பெற்ற பெயர்களைப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். பிராமண முறை சமுதாய அமைப்பே கல்வி, நாகரிகம் முதலியன தமிழ் தாட்டில் முன்னேறியதற்குக் காரணம்.’

இந்த மேற்கோளிலிருந்து தமிழக வரலாற்றின் ஒரு கண்ணோட்டம் தெளிவாயிற்று. மேலும் அது எழுந்த சமூகச் சூழ்நிலையும் ஒருவாறு விளங்கப்பட்டது.

இனி இரண்டாவது கண்ணோட்டத்தை ஆராய்வோம்.

தமிழ்நாட்டில் பிராமணருக்குச் சமமாகத் தங்களைக் கருதிக் கொண்ட சைவர்களான முதலியார், பிள்ளை, சைவச் செட்டியார்கள், நகரத்தார், கவுண்டர் முதலிய நிலப்பிரபுத்துவ வர்க்கத்தைச் சார்ந்தவரும் சமூக நிலையில் பிராமணருடைய ஆதிக்கம், தங்களுக்கு வேண்டுமென்று எண்ணினர். ஆங்கில ஆதிக்கத்தில் ‘அறிவாளி வர்க்கமா’கத் தாங்கள் உயர வேண்டுமென எண்ணினர். பிராமணர்களுடைய ஆரிய நாகரிகக் கொள்கை இவர்களுக்கு வரப்பிரசாதமாகக் கிடைத்தது. இவர்களும் ஒரு தத்துவத்தை உருவாக்கிக் கொண்டனர் அதற்கு அடிப்படை ஆரிய, திராவிட நாகரிகங்களிலுள்ள முரண்பாடுகளைப் பற்றி, ஆங்கில ஆசிரியர்களுடைய கருத்துக்கள்தாம் தமிழிலக்கியத்தில் இவர்கள் தென்னாட்டுப் பெருமையைக் கண்டார்கள் தமிழின் சிறப்பையும், தமிழ் நாட்டின் தொன்மையையும் நிறுவ இவர்கள் வரலாறு காணத் துணிந்தனர். இச்சமயம் ‘மோகன்ஜதாரோ, ஹரப்பா’ அகழ்வு ஆராய்ச்சிகள் வெளிவந்தன. அவற்றைப் பற்றி ஹீராஸ் பாதிரியார் என்ற மேனாட்டு ஆராய்ச்சியாளர் கருத்துக்களை விமர்சனம் எதுவுமின்றி அப்படியே ஏற்றுக் கொண்டனர். பிராமணர்கள் ஆரிய உயர்வைப் பற்றி எழுதினால் இவர்கள் ஆரிய இழிவையும் திராவிட உயர்வையும் பற்றி எழுதினர்.




36