16. பாரதியும் பாரதிதாசனும்
ஆன்றோர் வாழ்த்து
(அறுசீர் விருத்தம்)
காரிமிகு குறிஞ்சி முல்லை
கவின்மிகு மருதம் நெய்தல்
சீர்மிகு தமிழ கத்தின்
செயல்மிகு வீரர்க் கெல்லாம்
கூர்மிகு படைகள் ஏந்திக்
குலமிகு தமிழை முன்னாள்
பார்மிகு அரசி யாக்கிப்
பண்மிகக் காத்தார் வாழி!
வான்தொடு மாடக் கூடம்
வயல்தொடு செந்நெற் குன்றம்
தேன்தொடு மலையின் சாரல்
திசைதொடு கரும்பு தென்னை
கான்தொடு நீண்ட ஆறு
கடல்தொடு கலங்கள் கண்டோர்
மான் தொடு விழியார் மாற்றார்
மயக்கினர் தமிழ கத்தை!
விழியினிற் கலப்புக் கண்டோம்;
வீரத்திற் கலப்புக் கண்டோம்;
மொழியினிற் கலப்புக் கண்டோம்;
முறையினிற் கலப்புக் கண்டோம்;
வழியினிற் கலப்புக் கண்டோம்;
வாழ்க்கையிற் கலப்புக் கண்டோம்;
குழியினில் வீழ்ந்தோம்! மாற்றார்
குடியேறி விட்டார் நாட்டில்!