7. நிகழ்காலத் தமிழகம்
(எண்சீர் விருத்தம்)
அலைவாழ்த்த எழுங்கதிர்போல் ஆன்றோர் வாழ்ந்த
அருந்தமிழர் கலையரங்கில், கவியரங்கத்
தலைமையுறு கவியரசே! புரட்சி வேந்தே!
தமிழருளம் குடிகொண்ட தமிழ மேலோய!
விலையில்லாத் தமிழ்க்கவிதை பாடு கின்ற
மேன்மக்காள்! கலைபயிலும் தமிழ்நாட் டீரே!
தலை தாழ்த்திக் கைகூப்பி உங்கட் கென்றன்
தமிழ்வணக்கம் படைக்கின்றேன்; ஏற்பீர்! ஏற்பீர்!
நிகழ்காலத் தமிழகத்தை நினைத்தேன்; நெஞ்சில்
நீளின்பம் மிகக்கண்டேன்; பண்டு வாழ்ந்தோர்
புகழெல்லாம் பனிபடர்ந்த வானைப் போலப்
பொலிவிழந்து போனதுண்டு மாற்றார் கூற்றால்;
அகழ்ந்தெடுத்தோம் பொதுப்பகையை; அறத்தால் [வென்றோம்;
அரசியலை மக்களெலாம் அடைந்தோம்; கண்டோம்
முகமாற்றம்; முழுமாற்றம் கண்டோம் இல்லை!
முயல்கின்றோம்! தமிழ்வாழ்வே முடிவில் வெல்லும்!
2
பண்டிருந்த தனித்தமிழைத் தமிழர் பண்பைப்
பன்னெடு நாள் மறந்திருந்தோம்; உணர்ந்தோம் இன்று!
தொண்டுசெய்ய முனைந்துவிட்டார் இளைஞர் கூட்டம்!
துறைதோறும் மறுமலர்ச்சி துளிர்க்கக் கண்டோம்!
வண்டலிடு காவிரிபோல் என்றும் வற்றா
வளர் தமிழைக் காப்பதற்குப் புலவர் கூட்டம்
உண்டென்றும் என்பதற்குத் தலைமை தாங்கும்
கவியரசர் எம்தாசான் ஒருவர் போதும்!
3