132 குறியென்பேன்! கொள்கை பிறக்கும் வழிதன்னை அறியீரோ! அன்பின் வழிய துயிர்நிலையாம்!
வீட்டுக்கு வீடு வெளிக்கதவு செப்பனிட்டுப் பூட்டிட்டும், உள்ளே புறத்தாழ் இடுவதுவும் அன்பால் விளைந்த அருஞ்செயலாம் என்பேன்நான்! அன்பகத் தில்லையெனில் எத்தொழிலும் ஆகாதே!
தன்வீடு தன்பெண்டு தன் பிள்ளை என்பதுவும், தன்நாடு தன்னினம் தன்மொழி என்பதுவும் எந்நாட் டவரும் இயம்புகின்ற அன்புமொழி நன்னாட்டம் ஆகாதோ? நாம்மறுக்கக் கூடுவதோ? எப்பொழுதோ மூளும் எதிரி படையெடுப்பை முப்படையைக் கொண்டு முறியடிக்க, எந்நாடும் தற்காப்புக் காகத் தனியே படைதிரட்டி நிற்பதுவும், எல்லேயிலே நிற்பதுவும் காண்கின்றோம்! பெற்ற திருநாட்டைப் பேணியே காக்கின்ற உற்றநல் லன்பின் உணர்வே பெரும்படைகள்! அன்பின் வழிய துயிர்நிலை ஆகுமெனும் இன்பத் திருக்குறளின் ஏற்றமிகு நற்றலைப்பைப் பாடி வருகையிலே பற்றுள்ளங் காட்டாமல் ஏடி முகந்தொங்கப் போட்டே இருக்கின்றாய்? உன்னன்பைப் பாடாமல் ஊர்ச்செய்தி சொல்லுவதால் என்ன பயனென்ற ஏக்கக் கலக்கமோ? பாட்டி ஒருநால் பாவாடை சுற்றிநம் வீட்டுக் கிணற்றோரம் மேல்குளித்துக் கொண்டிருந்தாள்;