உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107

சிலையேந்தி ஆறலைப்போர் வாழுகின்ற காட்டிற்
       சிறுபொருளின் பெரும் பொருளின் சிப்பங்கள் ஏந்தி
மலையேந்திச் செல்லுகின்ற ஒற்றையடிப் பாட்டை
       வழியேந்திச் செல்லுகின்ற வணிகர்க்கும், நீல
அலையேந்திக் கொந்தளிக்கும் நெடுங்கடலின் மேலே
       அடுக்கடுக்காய் மரங்கட்டி அச்சத்தைப் போக்கி
விலையேந்திச் செல்லுகின்ற மீனவர்க்கும் இந்த யாராம்?
       மண்ணுலகில் உணவளிப்போன் உழவ னன்றி

பொய்யருக்கும் உழவன் தான் கொடுக்கின்றான். நாட்டின்
       பொதுத்தேவைப் பொருளெல்லாம் செய்கின்ற நீண்ட
கையருக்கும் உழவன் தான் கொடுக்கின்றான்; நல்ல
       கவிஞருக்கும் கலைஞருக்கும் கொடுக்கின்றான்; பூணூல்
ஐயருக்கும் கொடுக்கின்றான்; அறிவியலைச் சேர்க்கும்
       அறிஞருக்கும் கொடுக்கின்றான்; தொந்திபெருத்துள்ள
மெய்யருக்கும் கொடுக்கின்றான்! கடல்சூழ்ந்த இந்த
       மேனாடும் கீழ்நாடும் இவன்குடையின் கீழாம்!

உண்டியினைக் கொடுக்கின்ற நல்லுழவன் நாட்டில்
       உயிர்கொடுக்கும் கிழவனென்றும். பொருள் கொடுப்போனென்றும்
பண்டிருந்த புலவரெலாம் பறைசாற்றிப் போனார்!
       படிக்கின்றோம்; பார்க்கின்றோம். இந்நாளும் உண்மை
மண்டிணிந்த நிலம்வாழ மக்களினம் வாழ
       வானுக்கும் மண்ணுக்கும் வழிப்பாட்டை போட
எண்டிசையும் நல்லுழவன் பெருந்தோளைப் பேணி
       இமைபோலக் காத்திடுவோம்! ஏற்றமுறும் நாடே!

உழவாக்கம் இல்லையெனில் உயிராக்கம் உண்டோ?
       உயிராக்கம் இல்லையெனில் ஊராக்கம் உண்டோ?
விழவாக்கம் பொருளாக்கம் வெற்றி முரசாக்கம்

       வீரர்களின் தோளாக்கம் வெளியுலக நட்பு